சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான தற்போதுள்ள வயது வரம்பு மற்றும் தேர்வு முயற்சிகளுக்கான விதியை மாற்றுவது சாத்தியமில்லை என மத்திய அரசு மாநிலங்களவையில் அறிவித்துள்ளது.
ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., போன்ற பணிகளுக்காக சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இத்தேர்வெழுதலாம். முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களாக நடக்கும் இத்தேர்வுகளுக்கு பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 21 அதிகபட்சம் 32 ஆக உள்ளது. ஓ.பி.சி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 35. எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான வயது உச்சவரம்பு 37 ஆக உள்ளது.
பொதுப் பிரிவினர் 6 முறை இத்தேர்வை முயற்சிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் வயது உச்சவரம்பான 37 வரை எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதலாம். இதர பிரிவினர் 9 முறை முயற்சிக்கலாம். கோவிட் சூழல் காரணமாக வயது வரம்பில் தளர்வு மற்றும் கூடுதல் தேர்வு முயற்சிகள் அளிக்க வேண்டும் என தேர்வர்கள் விரும்பினர்.
அது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவைக்கு இன்று அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறியதாவது: கோவிட் தொற்றுநோய் காரணமாக சிவில் சர்வீசஸ் தேர்வில் வயது தளர்வு மற்றும் கூடுதல் முயற்சிகள் வழங்க வேண்டும் என்ற கருத்துக்கள் கிடைக்கப்பெற்றன. ரிட் மனுக்கள் மூலம் இந்த பிரச்சினை உச்ச நீதிமன்றத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில், இந்த விவகாரம் பரிசீலிக்கப்பட்டது.
அதன்படி சிவில் சர்வீசஸ் தேர்வைப் பொறுத்தவரை வயது வரம்பு மற்றும் தேர்வு முயற்சிகளின் எண்ணிக்கை தொடர்பான தற்போதைய விதிகளை மாற்றுவது சாத்தியமில்லை. யு.பி.எஸ்.சி., தேர்வுகளின் இறுதி முடிவு அறிவிக்கப்பட்ட பின்னரே விடைத்தாள்கள் வெளியிடப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
Advertisement