புதுடெல்லி:
தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள 3 முக்கிய மாநகராட்சிகளையும் ஒரே மாநகராட்சியாக இணைக்க வகை செய்யும் டெல்லி மாநகராட்சி திருத்த மசோதா மீது இன்று மக்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்று பல்வேறு தலைவர்கள் பேசினர். டெல்லியில் அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி மாநகராட்சி இணைப்பு மசோதாவை அவசரமாக கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன? என திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பினார்.
விவாதத்திற்கு பதிலளித்து பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, இந்த மசோதாவானது அரசியலமைப்பு சட்டம் 239AA பிரிவின்படி பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்குள் உள்ளது என்றார். டெல்லி யூனியன் பிரதேசமாக இருப்பதால், சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசுக்கு உரிமை உள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
“இங்கு மாநில உரிமைகள் குறித்து பேசப்படுகிறது. முதல்வர் கெஜ்ரிவாலும் இதையே பேசுகிறார். ஆனால், மகாராஷ்டிரா, குஜராத், மேற்கு வங்காளத்துக்காக இதுபோன்ற மசோதாவை என்னால் கொண்டு வர முடியாது. மாநிலங்களில் நானோ அல்லது மத்திய அரசாங்கத்தாலோ இதை செய்ய முடியாது. ஆனால், மாநிலத்திற்கும் யூனியன் பிரதேசத்திற்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால், அரசியலமைப்பை மீண்டும் படிக்க வேண்டும்’ என்றார் அமித் ஷா.
அதன்பின்னர் வாக்கெடுப்பின் மூலம் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக மசோதாவைக் கொண்டுவரும் மத்திய அரசின் நடவடிக்கையை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியது. தோல்வி பயத்தால் தேர்தலை தாமதப்படுத்தும் பாஜகவின் முயற்சி இது என்று குற்றம்சாட்டி உள்ளது.