இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தின் மீது நாளை (வியாழக்கிழமை) விவாதம் நடக்கிறது. அதை தொடர்ந்து 3-ந் தேதி ஓட்டெடுப்பு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் இம்ரான் கான் தலைமையிலான பிடிஐ கட்சியின் முக்கிய கூட்டணி கட்சியான எம்.க்யூ.எம்.-பி, அரசுக்கான தனது ஆதரவை விலக்கிக் கொண்டது. எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானில் பெரும்பான்மையை இழந்தது இம்ரான்கானின் அரசு. நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே இம்ரான்கான் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கான் பெரும்பான்மையை இழந்த நிலையில், அவர் பதவி விலகுவார் என்று தகவல் வெளியானது. புதிய பிரதமராக ஷபாஷ் ஷரீஃப் பதவியேற்க வாய்ப்பு உள்ளது என்று பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் பிலாவல் பூட்டோ தெரிவித்திருந்தார்.
ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ராஜினாமா செய்ய மாட்டார் என அமைச்சர் ஃபாவத் சவுத்ரி திட்டவட்டமாக தெரிவித்தார். பிரதமர் இம்ரான் கான் கடைசி பந்து வரை போராடும் வீரர் என்றும் அவர் கூறி உள்ளார்.