திருப்பதி:
ஆந்திர மாநிலம் கடப்பா ஒய்.எஸ்.ஆர் மாவட்டம் கோடுமால்லு, ராமநாதபுரத்தை சேர்ந்தவர் மாதரவள்ளி. பிரகாசம் மாவட்டம் ஜித்தலூரை சேர்ந்தவர் ஷேக் முன்னி (வயது 35). இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 1 ஆண் குழந்தை பிறந்து இறந்துவிட்டது.
ஷேக் முன்னி அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். அதே சூப்பர் மார்க்கெட்டில் மகபூப் உசேன் என்பவரும் வேலை செய்து வந்தார். மகபூப் உசேன், ஷேக் முன்னி இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். நாளடைவில் இவர்களின் நட்பு கள்ளக்காதலாக மாறியது. இவரது கள்ளக்காதல் விவகாரம் ஷேக் முன்னியின் கணவர் மாதரவள்ளிக்கு தெரிய வந்தது.
மாதரவள்ளி மனைவி மற்றும் மகபூப் உசேனை கண்டித்தார். ஆனால் கணவரின் கண்டிப்பை அலட்சியம் செய்துவிட்டு ஷேக் முன்னி, மகபூப் உசேனுடன் கள்ளக்காதலை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் ஷேக்முன்னி கர்ப்பமடைந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த மாதரவள்ளி தனது நண்பர்களான கோடூர் போலீசில் வேலை செய்துவரும் போலீஸ்காரர் ஆதாம், கலசப்பாடு போலீசில் வேலை செய்துவரும் ஜிலானி மற்றும் அவரது நண்பர்களான சையது உசேன் உள்பட 11 பேருடன் சேர்ந்து ஷேக் முன்னியை கடத்திச் சென்றனர். பின்னர் ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து சரமாரியாக தாக்கினர். தாக்குதலில் படுகாயமடைந்த ஷேக் முன்னி பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து ஷேக் முன்னியின் பிணத்தை அங்குள்ள வயலில் வீசி விட்டு ஒன்றும் தெரியாதது போல் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோடு மால்லு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் ரமேஷ் பாபு மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினார்.
பிரேத பரிசோதனையில் ஷேக் முன்னியின் வயிற்றில் ஆண் சிசு இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் ஷேக் முன்னியை அவரது கணவர் மற்றும் 2 போலீசார் உட்பட 11 பேர் கடத்திச்சென்று கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து மாதர வள்ளி, போலீஸ்காரர்கள் ஆதாம், ஜிலானி அவரது நண்பர் சையது உசேன் மற்றும் மாதரவள்ளியின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.