பீஜிங்,
உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவின் 4-வது அலை, மெல்ல உலக நாடுகளில் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தென்கொரியா மற்றும் சீனாவில் கொரோனாவின் தாக்கம் இப்போது அதிகமாக உள்ளது.
கொரோனா முதன்முதலில் பரவ தொடங்கிய காலகட்டத்தில், கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் இல்லையென்றாலும், சீனா முதல் அலையை சமாளித்துவிட்டதாக தெரிவித்தது.
உலகம் முழுவதும் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்திய இரண்டாவது அலையில், டெல்டா வகை கொரோனா வைரசை சமாளித்துவிட்டதாக சீனா தெரிவித்தது.
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 1 லட்சத்து 50 ஆயிரம் வரையில் தான் உள்ளது என்று தெரிக்கப்பட்டது.இது இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட 22 மடங்கு குறைவு.
இப்படி கொரோனா மற்றும் டெல்டாவை சமாளித்த சீனாவுக்கு இப்போது பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது ஒமைக்ரான். தற்போது ஒமைக்ரானால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது சீனா.
அங்கு ஓராண்டு காலத்துக்கு பிறகு கொரோனா பதிப்பால் சமீபத்தில் இருவர் உயிரிழந்திருப்பது சீனாவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தற்போது ஒமைக்ரானால் ஏற்பட்ட பாதிப்பால் வூஹான் நகரை மிஞ்சியது ஷாங்காய் நகரம். ஷாங்காய் நகரத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் சீனாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் அது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் பீஜிங்கிற்கு அடுத்தபடியாக சீனாவின் பணக்கார நகரமாக ஷாங்காய் உள்ளது. மேலும், உலகின் மிகப்பெரிய துறைமுகத்தை கொண்டது. அங்கு அமலில் உள்ள கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளால் உலகளாவிய வர்த்தகம் பாதிப்புக்கு உள்ளாகும் சூழல் உருவாகியுள்ளது.
சீனாவில் இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் இதுவே அதிக கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்காக உள்ளது. ஷாங்காய் நகரில் நூற்றுக்கும் கீழே பதிவாகி வந்த கொரோனா பாதிப்பு இப்போது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் வரை பதிவாகி வருகிறது.
தற்போது ஷாங்காய் நகரின் கிழக்கு பகுதியில், முழு ஊரடங்கு அமலில் உள்ளது.அடுத்து வரும் வெள்ளிக்கிழமை முதல், ஷாங்காய் நகரின் மேற்கு பகுதி முழு ஊரடங்கு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
முக்கிய தொழில் நகரமான ஷாங்காயில் அமலில் உள்ள கடும் ஊரடங்கு காரணமாக சீன வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் உணவு மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை உயர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன அரசு எச்சரித்துள்ளது.
சீனாவுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது ஒமைக்ரான் என்பதில் சந்தேகமில்லை. இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறது சீனா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.