தெலுங்கானா மாநிலம் குண்டூர் மாவட்டம் மங்களகிரி அருகே உள்ள கண்டலாயபேட் பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவருக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவிக்கு 3-வதாக பெண் குழந்தை பிறந்தது. இதனால் 3 மகள்களையும் எப்படி வளர்க்க போகிறோமோ? என அவர் பயந்தார். இதனால் அந்த குழந்தையை விற்க முடிவு செய்தார். இதுபற்றி அவர் தனது மனைவியிடம் தெரிவித்தார்.
அதற்கு முதலில்அவரும் சம்மதம் தெரிவித்தார். ஆனால் சில நாட்களில் அவர் மனம் மாறினார். பெற்ற குழந்தையை விட்டுக் கொடுக்க மறுத்தார். இருந்த போதிலும் மனைவியின் எதிர்ப்பை மீறி காயத்திரி என்ற புரோக்கர் மூலம் மனோஜ் தனது 3 மாத பெண் குழந்தையை ரூ.70 ஆயிரம் ரூபாய்க்கு விற்றார்.
இதையடுத்து காயத்திரி குழந்தை இல்லாத தம்பதிக்கு அந்த குழந்தையை விற்பனை செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கினார். அவர் நலகொண்டா மாவட்டம் பால்கெட் கண்டபிரலு பகுதியை சேர்ந்த பாக்யா நந்து என்பவரிடம் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்றார்.
அவர் தனது உறவினர் உதவியுடன் ஐதராபாத்தில் சுக் பகுதியை சேர்ந்த நூர்ஜகான் என்ற பெண்ணிடம் ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்தார்.
இதையடுத்து அந்த குழந்தை ஐதராபாத் ஆரியன்னகுடாவுக்கும், விஜயவாடா பென்ஸ் சர்க்கிளுக்கும், விஜயவாடா குல்லபுடி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் மாறி, மாறி விற்கப்பட்டது. இதற்காக லட்சக்கணக்கில் பணம் கைமாறியது,
கடைசியாய அந்த குழந்தை ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் எல்லுரு என்ற இடத்தை சேர்ந்த விஜயலட்சுமி என்ற பெண்ணிடம் ரூ 2 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
இது தொடர்பாக மனோஜ் மனைவி காயத்திரி மங்களகிரி போலீஸ் சூப்பிரண்டு ராம் பாபுவிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து குழந்தையை மீட்க அவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். இதற்காக அவர் தனிப்படை அமைத்தார். அவர்கள் முதலில் மனோஜிடம் விசாரணை நடத்தினார்கள், இதில் அவர் குழந்தையை விற்பனை செய்ததை ஒப்புப் கொண்டார்.
அதன் பிறகு போலீசார் நடத்திய விசரணையில் கடந்த 2 மாதத்தில் பச்சிளம் குழந்தை மங்கள கிரியில் இருந்து மேற்கு கோதாவரி வரை சங்கிலி தொடர் போல் அடுத்தடுத்து 7 தடவை கைமாறி பலரிடம் விற்பனை செய்யப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியானது.
இச்சம்பவம் தொடர்பாக குழந்தையின் தந்தை மனோஜ் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் குழந்தையை பத்திரமாக மீட்டு அதன் தாயிடம் ஒப் படைத்தனர்.
விசாரணையில் இதன் பின்னணியில் ஒரு பெரிய குழந்தை விற்பனை கும்பல் இயங்கி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிகளில் குழந்தை பெற்றெடுக்கும் பெண்களிடம் அவர்களது வறுமையை பயன்படுத்தி குழந்தைகளை விலைக்கு வாங்கி குழந்தை பாக்கியம் இல்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு விற்பனை செய்து வந்தனர்.
இதில் இதுவரை எத்தனை குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது என்பது தெரியவில்லை.இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகலாம் என தெரிகிறது.
இதையும் படியுங்கள்… 5 மாதத்தில் கசந்த திருமண வாழ்க்கை: இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொலை