கோடை தொடங்கிவிட்டாலே சருமப் பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். சருமத்துக்கு மட்டுமல்லாமல் கேசத்துக்கும் நாம் இந்தக் காலகட்டத்தில் கவனம் கொடுக்க வேண்டும். கோடைக்காலத்தில் கேசம் வறண்டு, பிளவுபட்டு, பொலிவிழந்து காணப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் அதை எதிர்கொண்டு பராமரிப்பதற்கான வழிமுறைகளை பியூட்டி தெரபிஸ்ட் வசுந்தரா கூறுகிறார்.
1. ஹேர் மிஸ்ட் (Hair mist)
கோடைக்காலங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போதோ, கடுமையான வெயிலினாலோ கேசம் வறண்டு, எண்ணெய்ப் பசை இல்லாமல் இருக்கும். இதைத் தவிர்க்க, ஸ்பிரே பாட்டிலில் தண்ணீரும் 5 முதல் 6 சொட்டுகள் லாவெண்டர் எண்ணெயும் கலந்து வைத்துக்கொள்ளவும். கேசத்தில் அடிக்கடி இந்த ஸ்பிரேயை அடித்துக்கொள்ளலாம். கேசம் வறண்டு போவது குறையும்.
2. ஹேர் சீரம்
இதுவும் ஒரு விதமான எண்ணெய்தான். இது பிசுபிசுப்புத் தன்மை நீக்கப்பட்டதுடன் வாசத்துடன் இருக்கும், எல்லா தரப்பினரும் பயன்படுத்தலாம். ஒவ்வொருவரும் தங்களின் கேசத்துக்கு ஏற்றவாறு சீரத்தைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தலாம். இதைத் தினமும்கூட கேசத்தில் அப்ளை செய்யலாம். சீரம் பயன்படுத்தும்போது கேசம் பளபளப்பாகவும், பொலிவிழக்காமலும் இருக்கும்.
3. ஹேர் ஸ்பிரே
கோடைக்காலத்தில் அதிகமாக டூ வீலரில் பயணிப்பவர்கள் தங்கள் கேசத்துக்கு ஏற்ற வகையில் ஹேர் ஸ்பிரேயைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம். இதைத் தலையில் ஸ்பிரே செய்துகொண்டு வெளியில் செல்லலாம். இதன் மூலம் கேசம் கோடைக்காலத்தில் ஏற்படும் மாசடைதலில் இருந்து பாதுகாக்கப்படும். மேலும் பிளவுபடுதல், நிறம் மாறுதல் போன்றவையும் கட்டுப்படுத்தப்படும்.
4. ஹேர் மாஸ்க்
சிலருக்கு மிக அதிகமாக கேசம் பாதிக்கப்பட்டிருக்கும். வெயில் காலங்களில் இவர்களின் கேசம் இன்னும் அதிகமாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இவர்கள் தங்களுடைய கேசத்துக்கு ஏற்ற ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். கேசத்தில் இந்த ஹேர் மாஸ்க்கை அப்ளை செய்து ஐந்து நிமிடத்துக்கு பின்பு நன்றாக அலசிய பின் வெளியே செல்லலாம்.
மேற்கூறிய முறைகள் மட்டுமல்லாமல் கண்டிஷனர் பயன்படுத்துவதும் கோடைக்காலத்தில் கேசத்துக்கு பாதுகாப்பைத் தரக்கூடியது. இந்த மாதிரியான பாராமரிப்பு முறைகள் கோடைக்காலத்தில் மட்டுமல்லாமல், மலைப் பகுதிகளுக்குச் செல்லும்போதும் மேற்கொள்வது கேசத்துக்குப் பாதுகாப்பைத் தரும்.