ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் மணலில் புதைந்து கிடக்கும் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய தீர்த்தக் குளங்களை கண்டுபிடித்து புனரமைக்கும் பணிகளை செய்து வரும் விவேகானந்த கேந்திரம் அமைப்பு, சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் மத்திய ஜல் சக்தித்துறையின் தேசிய தண்ணீர் விருதை பெற்றுள்ளது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய தீர்த்தங்களில் தீர்த்தமாடுவதன் மூலம் முன்னோர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு தொடர்புடைய 108 புனித தீர்த்தக்குளங்கள் ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளன. இவற்றில் ராமநாதசுவாமி கோயிலின் உள்ளே அமைந்துள்ள 22 தீர்த்தங்களும் அக்னி தீர்த்தக் கடற்கரையும் அடங்கும். முன்பெல்லாம் ராமேஸ்வரத்துக்கு தீர்த்தமாட வருபவர்கள் ஒரு மாத காலம் தங்கியிருந்து 108 தீர்த்தங்களிலும் தங்களின் பாவங்கள், தோஷங்களைப் போக்கி விட்டுச் செல்வர். கடந்த 50 ஆண்டுகளில் இந்த 108 தீர்த்தங்களில் பல திர்த்தங்கள் தனியார் ஆக்கிரமிப்பு, இயற்கை சீற்றங்களினால் அழிவுக்குள்ளாகியும், மணலில் மூடியும் போயின.
அப்துல் கலாம் துவங்கிய திட்டம்
இந்த நிலையில், விவேகானந்தரின் 150-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விவேகானந்த கேந்திரம் அமைப்பு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு தொடர்புடைய தீர்த்தங்களை புனரமைக்க துவங்கியது. இதன் தொடக்க விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் 28.01.2014 அன்று ராமேஸ்வரத்தில் துவங்கி வைத்து இந்த திட்டத்திற்கு பசுமை ராமேஸ்வரம் என்று பெயரும் சூட்டினார்.
விவேகானந்த கேந்திரம் பசுமை ராமேஸ்வரம் திட்டத்தின் கீழ் கடந்த 8 வருட காலமாக 37 தீர்த்தங்கங்கள் சுமார் ரூ.3.5 கோடி செலவில் புனரமைத்துள்ளது. இதில் தர்மர், சர்வரோக நிவாரண, பரசுராம், ஞானவாதி, குமுதம், ஹர, நீலகண்ட, பனச்ச, கிருஷ்ண ஆகிய தீர்த்தங்களில் முழுமையாக மணலில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு புனரமைக்கப்பட்டுள்ளது. புனரமைக்கப்பட்ட பல குளங்களில் தற்போது தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், மூன்றாவது தேசிய தண்ணீர் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) டெல்லியில் உள்ள விக்யான் பவனில் நடைபெற்றது. இதில் நீர்வளத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியதற்கான சிறந்த மாநிலங்களுக்கான பிரிவில், தமிழகத்திற்கு மூன்றாம் பரிசும், இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்திய சிறந்த கிராமப் பஞ்சாயத்துக்கான பிரிவில் செங்கல்பட்டு மாவட்டம் வெள்ளப்புத்தூர் ஊராட்சி 2ம் பரிசையும், சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி மைப்புகளுக்கான பிரிவில், மதுரை மாநகராட்சி 3வது பரிசையும், சிறந்த பள்ளிக்கூடங்களுக்கான பிரிவில், காவேரிப்பட்டிணம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதல் பரிசையும், சிறந்த தொழிற்சாலைகளுக்கான
பிரிவில், தமிழகத்தில் உள்ள ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் (ஹுண்டாய் கார் தொழிற்சாலை)-க்கு இரண்டாம் பரிசும் பெற்றன.
மேலும், சிறந்த தொண்டு நிறுவன பிரிவில் விவேகானந்தா கேந்திரத்திற்கு 2-ம் பரிசை மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங், விவேகானந்தா கேந்திர செயலாளர் வாசுதேவிடம் வழங்கினார்.