டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தலில் தோற்கடிக்க முடியாததால், அவரை கொலை செய்ய பாரதிய ஜனதா முயற்சி செய்வதாக துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் இந்துக்கள் படுகொலையை கிண்டல் செய்வதாக கூறி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீடு முன்பாக பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினருக்கும், பாரதிய ஜனதாவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதில் தள்ளுமுள்ளு உருவானது.
இதில் கெஜ்ரிவால் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராக்கள் மற்றும் தடுப்புகளை பாரதிய ஜனதாவினர் அடித்து நொறுக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாமல், அரவிந்த் கெஜ்ரிவாலை கொல்வதற்காகவே பாரதிய ஜனதா கட்சியினர் தடுப்புகளை அடித்து நொறுக்கி அவரது வீட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளனர் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
முன்னதாக ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படத்திற்கு மாநிலத்தில் வரிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கோரி, டெல்லி சட்டசபையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட் கூட்டத்தொடரில் குறுக்கிட்ட நிலையில், ‘அந்த படத்தை யூடியூப்பில் போடுங்கள், அனைவரும் பார்க்க இலவசமாக கிடைக்கும்’ என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் பதிலளித்தார்.
இது தொடர்பாக அப்போது சட்டசபையில் பேசிய கேஜ்ரிவால், ” ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என பா.ஜ.,வினர் விரும்பினால், திரைப்பட தயாரிப்பாளர் விவேக் அக்னிஹோத்ரியிடம் பேசி அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில், யூடியூப்பில் வெளியிட வேண்டும். ஏன் இதற்கு வரிவிலக்கு வேண்டும்? உங்களுக்கு இது வேண்டுமானால் யூடியூப்பில் போட சொல்லுங்கள். எல்லாரும் ஒரே நாளில் பார்த்துவிடுவார்கள்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM