ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லவ்ரோவ் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக இன்று டெல்லி வருகிறார். உக்ரைனுடன் போர் நடந்து வரும் சூழலில், அவரது இந்திய பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ஐ.நா.வில் ரஷ்யாவுக்கு எதிராக நடந்த வாக்கெடுப்புகளில் இந்தியா தொடர்ந்து நடுநிலை வகித்தது. இதனால் போரை நிறுத்த ரஷ்யாவுக்கு அழுத்தம் தருமாறு மேற்கத்திய நாடுகள் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டன.
அதனை நேரில் வலியுறுத்தும் வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஆலோசகர்களில் ஒருவரும் அந்நாட்டு தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகருமான தலீப் சிங் நேற்று இந்தியா வந்து சேர்ந்தார். அதே போல் பிரிட்டனின் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸூம் இன்று இந்தியா வருகிறார். இந்தச் சூழலில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்வும் இரண்டு நாள் பயணமாக டெல்லி வருவது, ஒட்டுமொத்த உலக நாடுகளையும் இந்தியா பக்கம் திரும்ப வைத்துள்ளது.
இந்தப் பயணத்தின்போது செர்ஜி லாவ்ரோவ் யாரை சந்திக்கவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. எனினும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை அவர் சந்திக்கலாம் என கூறப்படுகிறது.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM