கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பின்தங்கிய தமிழகத்தின் பெருங்குடியான வன்னியர் இன மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் வன்னியர் இன மக்கள் நடத்திய போராட்டம் காரணமாக, வன்னியர் இன மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கியது.
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 35க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. இதன் காரணமாக வன்னியர் இட ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசும், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பாகவும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை மற்றும் அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்ததை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்.
இந்நிலையில், வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
அதில், வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.