பாலிவுட் – 100 கோடி கிளப்பில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண்

பாலிவுட்டைப் பொறுத்தவரையில் ஒரு படம் 100 கோடி வசூலைக் கடப்பது ஒரு சாதனையாகப் பார்க்கப்படுகிறது. அந்த விதத்தில் நடிகர் சல்மான் கான் அக்ஷய் குமார் ஆகியோர் தலா 15 படங்களையும், அஜய் தேவகன் 12 படங்களையும், ஷாரூக்கான் 7 படங்களையும் தங்கள் வசம் வைத்துள்ளனர்.

சில முன்னணி ஹிந்தி நடிகர்கள் மட்டுமே 100 கோடி கிளப்பில் உள்ளனர். தென்னிந்திய நடிகர்களைப் பொறுத்தவரையில் 'பாகுபலி 2, சாஹோ' படங்களின் மூலம் தெலுங்கு நடிகர் பிரபாஸும் அந்தப் பட்டியலில் உள்ளார். '2.0' படத்தின் மூலம் நடிகர் ரஜினிகாந்தும் அதில் இணைந்தார். அவருக்கு அடுத்து 'புஷ்பா' படத்தின் மூலம் அந்த 100 கிளப்பில் இணைந்தார் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுன்.

இப்போது 'ஆர்ஆர்ஆர்' படமும் ஹிந்தியில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளதால் அப்படத்தின் நாயகர்களான ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோரும் இணைந்துள்ளனர். ஹிந்தி நடிகர்களின் படங்கள் தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகின்றன. ஆனால், எந்தப் படமும் பெரிய அளவில் வசூல் செய்ததில்லை. ஆனால், 5 தென்னிந்திய நடிகர்களின் படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி அவை 100 கோடி வசூலைக் கடந்திருப்பது ஒரு சாதனையான விஷயம்.

அடுத்த மாதம் வெளியாக உள்ள கன்னடப் படமான 'கேஜிஎப் 2' படம் 100 கோடி வசூலைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குப் பின் சில தெலுங்குப் படங்களும், தமிழில் 'பொன்னியின் செல்வன்' படமும் ஹிந்தியில் வெளியாக உள்ளது. அதனால், இந்த வருடத்தில் மேலும் சில படங்கள் 100 கோடி சாதனையைப் படைத்து அந்தப் பட நடிகர்களை 100 கோடி கிளப் ஹீரோவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.