இந்தியாவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் விடை பெறுகிறது கொரோனா காலக் கட்டுப்பாடுகள்!

புதுடெல்லி: தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருவதால், நாட்டில் விதிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுப்பாடுகளையும் இன்று முதல் விலக்கிக் கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. அதே நேரம், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தலை தொடர்ந்து பின்பற்றும்படி மக்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது.கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் சீனாவின் வுகான் நகரில் முதல் முதலாக பரவிய கொரோனா வைரஸ், உலகின் அனைத்து நாடுகளிலும் பரவி, பலத்த உயிர்ச் சேதம், பெரும் பொருளாதார இழப்புகள் என மோசமான பாதிப்புகளை உருவாக்கி இருக்கிறது. கட்டுப்பாடுகள், ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளால் பல லட்சம் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, கோடிக்கணக்கான மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர். இந்தியாவில்  கடந்த 2020ம் ஆண்டும் தேதி  முதல் முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தொற்று பரவலை தடுக்க, மக்களுக்கு ஏராளமான  கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  தற்போது, நாடு முழுவதும் பெரும்பான்மை மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டது. மேலும், பல கோடி மக்கள் தொற்றினால் பாதிக்கப்பட்டு, இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை பெற்றுள்ளனர்.இதனால், 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாடு முழுவதும் தற்போது தினசரி கொரோனா பாதிப்புகள், பலிகள் கணிசமாக சரிந்துள்ளன. எனவே, மக்களின் நடமாட்டத்துக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை ஒன்றிய, மாநில அரசுகள் படிப்படியாக தளர்த்தி வருகின்றன. இதனால், மக்கள் தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றன. இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு, பலிகள் சரிந்து விட்டதால், கடந்த 2 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்பட்டு வந்த  கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுடன் விலக்கிக் கொள்ளப்படுகிறது.  கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, இன்றுடன் முடிகிறது. அதன் பிறகு, இந்த கட்டுப்பாடுகளை நீட்டிப்பதற்கான எந்த உத்தரவையும் ஒன்றிய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்காது. இருப்பினும், முகக் கவசம் அணிதல், கைகளை அடிக்கடி கழுவுதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.