புதுடெல்லி: பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.,க்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பிக்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே விஜய் சவுக் பகுதியில் சிலிண்டர்கள், இருசக்கர வாகனங்களுக்கு மாலை அணிவித்து எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போராட்டம் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “கடந்த 10 நாட்களில் பாஜக அரசாங்கம் பெட்ரோல், டீசல் விலையை 9 முறை உயர்த்தியுள்ளது. அதன் தாக்கம் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை நேரடியாக பாதிக்கிறது. உயர்ந்து வரும் விலையேற்றத்தையும் பணவீக்கத்தையும் மத்திய பாஜக அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என்றார்.
எம்.பி. அதிர் ரன்ஜன் சவுத்ரி கூறும்போது, “ஐந்து மாநிலத் தேர்தல் முடிந்தபிறகு பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயரும் என்று நாங்கள் கணித்தோம். அதன்படியே பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் உயர்வு திரும்பப் பெறப்பட வேண்டும். சாமானிய மக்கள் படும் வேதனைகளை இந்த பாஜக அரசு புரிந்து கொள்ளவில்லை” என்றார்.
தொடரும் பெட்ரோல் உயர்வு.. கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, மத்திய அரசு வரி குறைப்பு செய்து பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.10-ம் குறைத்தது. கடந்தாண்டு நவ.4-ம் தேதிக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட இந்த விலைக் குறைப்புக்குப் பிறகு, 137 நாட்களாக விலை உயர்த்தப்படவில்லை
இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதிலிருந்து 9 நாட்களில் 8-வது முறையாக இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.
பெருநகரங்களில் இன்றைய விலை நிலவரம்:
நகரங்கள் | பெட்ரோல் விலை | டீசல் விலை |
டெல்லி | ரூ.101.81 | ரூ.93.07 |
மும்பை | ரூ.116.72 | ரூ100.94 |
கொல்கத்தா | ரூ.111.32 | ரூ.96.22 |
சென்னை | ரூ.107.49 | ரூ. 97.56 |