உக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் ஒரு மாதத்தை கடந்துள்ள நிலையில் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்களை ரஷிய படையால் கைப்பற்ற முடியவில்லை. உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருவதால் ரஷிய ராணுவத்தால் முன்னேற முடியவில்லை. உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்து வருவதாக அமெரிக்கா, இங்கிலாந்து தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் ரஷிய அதிபர் புதின் அவரது நாட்டு ராணுவத்தாரால் தவறாக வழிநடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செயலாளர் கேட் பெடிங்பீல்ட் கூறியதாவது:-
ரஷிய அதிபர் புதின், அவரது ராணுவத்தால் தவறாக வழிநடத்தப்பட்டதாக உணர்ந்துள்ளதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இது உக்ரைன் போருக்கிடையில் புதினுக்கும், அவரது ராணுவ தலைமைக்கும் தொடர்ந்து பதற்றமான நிலையை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் ரஷிய ராணுவம் எவ்வளவு மோசமாக செயல்படுகிறது மற்றும் பொருளாதார தடைகளால் ரஷியா எப்படி முடங்கி கிடக்கிறது என்பது பற்றி புதினிடம் தவறான தகவல்கள் சொல்லப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம்.
ஏனென்றால் புதினின் மூத்த ஆலோசகர்கள் அவரிடம் உண்மையை சொல்ல பயப்படுகிறார்கள். புதின் தொடங்கிய போர் தவறானது என்பது தெளிவாகி இருக்கிறது. இது ரஷியாவை நீண்ட காலத்துக்கு பலவீனப்படுத்தும். மேலும் உலக அரங்கில் இருந்து தனிமைப்படுத்துவது அதிகரிக்கும் என்றார்.
மேலும் தன்னிடம் தவறான தகவல்களை கூறியதால் புதின் ஆத்திரத்தில் இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.