சென்னை: டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பிற்பகல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடம் நீடித்தது. அப்போது தமிழகத்தின் பல்வேறு தேவைகள் குறித்து பேசிய முதல்வர், டெல்லி திமுக அலுவலகம் திறப்பு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பின்போது, பிரதரிடம் ‘நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற்றுத்தர வேண்டும்; உக்ரைனில் இருந்து மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவந்துள்ள மாணவர்கள் படிப்பை தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்; காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது; நதிநீர் இணைப்பு திட்டம், தமிழக அரசின் பல்வேறு திட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியை பெறுவது, இலங்கையில் இருந்து அகதிகளாக வரும் தமிழர்களை கையாள்வது, பேரிடர் நிவாரண நிதியில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.
முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் 4 நாள் பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா – கலைஞர் அறிவாலய திறப்பு விழா, வரும் ஏப்.2-ம் தேதி நடக்கிறது.