குண்டூர்: ஆந்திர மாநிலத்தின் குண்டூர் மாவட்டம், மங்களகிரி போலீஸ் டிஎஸ்பி ராம்பாபு நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மங்களகிரி, கண்டாலயபேட்டை பகுதியை சேர்ந்தவர் மனோஜ். இவரது மனைவி ராணி. இவர்களுக்கு ஏற்கெனவே 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூன்றாவதாக ஒரு பெண் குழந்தை 3 மாதங்களுக்கு முன் பிறந்தது. மனோஜ் சில தீய பழக்கங்களுக்கு ஆளாகியிருந்ததால் அவரது குடும்பம் வறுமையில் இருந்தது.
இந்நிலையில், மனைவிக்கு தெரியாமல் 3 மாத பெண் குழந்தையை நாகலட்சுமி என்ற பெண்ணின் உதவியுடன் காயத்ரி என்பவருக்கு ரூ.70 ஆயிரத்துக்கு மனோஜ் விற்றுவிட்டார். அந்தக் குழந்தையை ஹைதராபாத்தை சேர்ந்த பாலவர்த்தி ராஜு என்பவருக்கு ரூ. 1.20 லட்சத்துக்கு காயத்ரி விற்றுள்ளார். பின்னர் நூர்ஜஹான் என்பவருக்கு ரூ. 1.80 லட்சத்து அந்த குழந்தை விற்கப்பட்டது. பிறகு நூர்ஜஹான்தனக்குத் தெரிந்த உதய் கிரண் என்பவரின் உதவியுடன் ஹைதராபாத் நாராயணகூடா பகுதியை சேர்ந்த உமாதேவி என்பவருக்கு ரூ.1.90 லட்சத்துக்கு விற்றுள்ளார்.
அப்படியே ஒருவர் கை மாறி ஒருவர் என கடைசியாக ஆந்திர மாநிலம், ஏலூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் அக்குழந்தையை ரூ. 2.50 லட்சத்துக்கு வாங்கியுள்ளார். இதனிடையே தாய் ராணி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார், தந்தையிடம் தொடங்கி அடுத்தடுத்து விசாரணை நடத்தினர். இதில் குழந்தையை மீட்ட போலீஸார், குண்டூர் எஸ்.பி. ஆரிஃப் அஃபீஸ் முன்னிலையில் தாய் ராணியிடம் குழந்தையை ஒப்படைத்தனர்.
குழந்தை விற்பனை தொடர்பாக அதன் தந்தை மனோஜ் உட்பட 11 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். புகார் மீது சிறப்பாக செயல்பட்ட அனைத்து போலீஸாரையும் எஸ்.பி. வெகுவாக பாராட்டினார்.
இவ்வாறு டிஎஸ்பி ராம்பாபு கூறினார்.