கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மண் அருகே உள்ள மேலாட்டூரில் நேற்று மாலை இன்ஸ்பெக்டர் சரோன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வேகமாக ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரை மறித்து போலீசார் சோதனையிட்டனர். காரின் முன் பகுதியிலும், பின் பகுதியிலும் ரகசிய அறைகள் இருந்தன. அந்த அறைகளை திறந்து பார்த்தபோது அதில் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருந்தது அதில் 500 ரூபாய் நோட்டுகளாக மொத்தம் ரூ.1 கோடியே 3 லட்சம் இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சொகுசு காரில் வந்தவர்கள் கோழிக்கோடு முக்கம்பகுதியைச் சேர்ந்த முகமது (54), ரகீம் (42) என்பது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது கோவையில் இருந்து அந்த பணத்தை எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.
இந்த பணத்தை கொண்டு செல்வதற்கான எந்தவித ஆதாரங்களும் அவர்களிடம் இல்லை. இதனால் பிடிபட்ட பணம் ஹவாலா பணமாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த பணத்தை போலீசார் பெருந்தல்மண் கோர்ட்டில் ஒப்படைத்தனர். பணத்தை கடத்தி வந்த முகமது, ரகீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கோவையில் இருந்து அந்த பணத்தை கொடுத்து அனுப்பியவர்கள் யார்? யாருக்காக எடுத்துச் செல்லப்பட்டது? என்பது பற்றி விசாரணை நடக்கிறது.