ஆந்திராவில் கோவில் திருவிழாவில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கடைகள் சூறையாடப்பட்டதோடு, சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் நடைபெற்ற உகாதி உற்சவத்தில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர். இந்நிலையில, டீ குடிக்கச் சென்ற கர்நாடகத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கும், உள்ளூர் வாசியான அந்த டீக்கடைக்காரருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் கர்நாடக பக்தர்கள் இணைந்து டீக்கடைக்காரரை சரமாரியாக தாக்கினர்.
இதற்கிடையில், டீக்கடைக்காரருக்கு ஆதரவாக உள்ளூர்வாசிகளும் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கர்நாடக பக்தர்கள், கடைகளை அடித்து நொறுக்கியதோடு, அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் தீயிட்டு கொளுத்தினர். சம்பவ இடத்துக்கு வந்த 200க்கும் மேற்பட்ட போலீசார் இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.