ஊசிப்புட்டான் | “நேரம் வரும், அப்ப இவனுக்கு இருட்டடிய போட்டுக்கலாம்" | அத்தியாயம் – 28

ரவி அங்கே வந்தபொழுது அந்த மனிதனின் சடலத்தை அங்கிருந்து அகற்றியிருந்தார்கள். மதிற்சுவற்றிலும் அதை ஒட்டி மழைநீர் வடிந்து செல்வதற்காகப் போடப்பட்டிருந்த சிமிண்ட் சறுக்கலிலும் ரத்தத்திட்டுகள் காய்ந்து உறைந்து கறுப்பாய் தெரிந்தது. அந்தச் சிமிண்ட் சறுக்கத்தில் வழுகிவிடாதபடிக்கு மிகவும் கவனமாகக் காலடி எடுத்து வைத்து இறங்கினான். அவன் நினைத்ததைப் போலல்லாமல் அந்தச் சிமிண்ட் சறுக்கல் மழை நீரின் உதவியால் மணல் துகள்கள் விலகிச் சற்று சொறசொறப்பாகவே இருந்தது.

அந்த மனிதனின் உடல் விழுந்து கிடந்ததாய் சொல்லப்பட்ட இடத்தின் அருகில் வந்து நின்றுத் திரும்பிப் பார்த்தான். அவன் முன்னே நாற்பத்தி ஐந்து டிகிரி கோணத்திற்கு சரிந்து ஏறிய சொறசொறப்பானச் சிமிண்ட் சறுக்கல் தெரிந்தது. அவன் மனக்கண்ணால் அந்த மனிதன் இந்தச் சொற சொற சிமிண்ட் தளத்தில் எப்படி விழுந்து எப்படி உருண்டு கீழே வந்திருப்பான் என்று யோசித்துப் பார்த்தான்.

புறங்கழுத்து முறிய கீழே விழுந்து ஹலாசனா செய்வது போல உடல் பின்பக்கமாக வளைந்து குதங்கி உருண்டு, உடற்பயிற்சி வகுப்பில் இந்த ஹலாசனாவைச் செய்யச் சொல்கையில் எத்தனைச் சிரமமாய் இருக்கும். உயிரிழந்த நிலையில் அல்லது உயிர் பிரியும் நிலையில் அது இலகுவாக இருந்திருக்குமா…? மனதின் கற்பனைகளுக்கு நடுவே மூளையின் எதார்த்தம் வந்து அவனுள் எட்டிப் பார்த்தது.

கற்பனைகளையும் கனவுகளையும் அவனிடமிருந்து பறித்துவிட்டால் அவனால் வாழ முடியாது. மூளையின் எதார்த்தக் கேள்வியால் சிதறிப் போன அவனுடைய கற்பனைகளைக் கனவுகள் கொண்டு மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யத் தயாரானான் ரவி. இப்பொழுது அவனுடைய மனம் அன்றைய தினம் அவன் கேட்ட கதைகளை வரிசையாகச் சொல்ல ஆரம்பித்தது.

ஊசிப்புட்டான்

“டம்முன்னு ஒரு சத்தம் கோர்ட் சைட்ல இருந்து கேட்டுது மக்ளே. என்ன சத்தம்னு திரும்பிப் பார்த்தா, ஒருத்தன் இந்த மதிலுக்கு மேல குப்புற கெடக்கான். நானும் மதிலெட்டி சாட முடியாம படுத்திருக்கான்னு தான் நினைச்சேன். அப்புறமா பாத்தா, தொப்புன்னு கீழ விழுந்து இந்தச் சறுக்குல உருண்டு போனான். அவன் விழுந்ததுமே அவன் பின்னாடி ஒரு மூணு பேரு கைல நல்ல பெரிய அறுவாவோட ஏறிச் சாடினானுவ. அதுல ஒருத்தன் இந்தச் சறுக்குல கீழ இறங்கி விழுந்து கிடந்தவன ஒரு வெட்டு வெட்டினான். அப்புறமா மூணு பேருமா நம்ம ஸ்கூல் சின்னக் கேட்டைப் பாத்து ஓட ஆரம்பிச்சானுங்க” கண்கள் அகல முருகேசன் அவனிடம் சொன்னதை நினைத்துப் பார்த்தான்.

‘இவனுவ ஏன் எப்பப் பாத்தாலும் கூட்டங்கூட்டமா போயே அடி வைக்கானுவோ. சினிமாவுல வர மாரி தனியா எல்லாம் இவனுவளுக்கு போய்ச் சண்ட போடத் தெரியாதா’ மனதினுள் நினைத்தபடியே மனிதக்கறி எதுவும் அங்கேத் தென்படுகிறதா எனத் தேடினான்.

“நம்ம ஊரு எங்க போயிட்டு இருக்குன்னே தெரியல. கோர்ட்ல மாஜிஸ்ட்ரேட்க்கு முன்ன வச்சு ஒருத்தன மூணு பேரு சேர்ந்து வெட்டியிருக்கிறானுங்க. மாஜிஸ்ட்ரேட் அங்க நின்ன போலீஸ்காரனுங்களப் பாத்து ஷூட்ன்னு ஆர்டர் கொடுத்திருக்காரு. ஆனா ஒரு போலீஸ்காரன் கூட அவெங் கைலருந்த துப்பாக்கிய தூக்கவே இல்ல. எல்லாவனுங்களுக்கும் பயம். எங்கே நம்மளயும் வெட்டிருவானுங்களோன்னு” மதிய நேரம் வகுப்பறையில் வைத்துத் தமிழாசிரியர் நடராஜன் வருத்ததோடு பேசிய வார்த்தைகள் ரவியின் காதுகளில் ஒலித்தது.

ரவியின் சிந்தனைகள் வலுப்பெற, அவன் காலின் கீழே எறும்புகள் சாரி சாரியாய் எதோவொன்றைத் தூக்கிக் கொண்டுப் போவதைப் பார்த்தான். அருகில் கிடந்த குச்சி ஒன்றை எடுத்து எறும்பின் வழித்தடத்திலிருந்த தடைகளை ஒதுக்கிப் பார்க்கையில், அங்கே காய்ந்து இறுகிப் போயிருந்த ஒரு பருப்பொருள் அவன் கண்ணில் பட்டது.

“லேய் அங்க என்னல பண்ணிட்டு இருக்க” அவன் பின்னாலிருந்து அதிகாரமாய் ஒரு குரல் கேட்டது. அது கிட்டத்தட்ட உடற்கல்வி ஆசிரியன் பூமணியின் குரலை ஒத்திருந்தது.

‘செத்தோம். இன்னைக்கு நம்மள சாவடி அடிக்கப் போறான்’ ரவி ஒரு நொடி திடுக்கிட்டாலும் பின், ‘பயமுறுத்துறவனால தான் பாய்ஞ்சு ஓட முடியும்’ என்கிற அவனது சிந்தனை மேலோங்க, நிதானமாகத் திரும்பி, “சார் இங்க பந்து விழுந்துட்டு அத எடுக்க வந்தேன்” என்றான்.

“லேய் ஸ்கூல் க்ரவுண்ட்ல கிரிக்கெட் வெளயாடக்கூடாதுன்னு சொல்லியிருக்கேம்லால. அதையும் மீறியா விளையாடிருக்க” அவரது குரல் இன்னும் அதிகாரமாய் ஒலித்தது.

“ஸ்கூல் டைம்ல விளையாடல, ஸ்கூல் முடிஞ்ச அப்புறமா தான் விளையாடினோம்” சட்டென ரவியிடமிருந்து வந்த பதில் பூமணியைத் திடுக்கிட வைத்தது.

“ஸ்கூலு விட்டதும் வீட்டுக்குப் போகத் தெரியாதால உனக்கு. போல வீட்டுக்கு” கத்திவிட்டு அவர் நடக்கவும், முனிசிபாலிட்டி பார்க் சங்கு ஊதுவதும் சரியாக இருக்க, அப்பொழுது தான் ரவிக்கு மணி ஐந்தாகிவிட்டது என்கிற நினைப்பும் வந்தது. ‘இந்நேரம் ஷைனி டியூஷன் முடிச்சு வந்திட்டு இருப்பா. இன்னும் அஞ்சு நிமிஷத்துல இந்த ஹாக்கி க்ரவுண்ட்க்கு வந்திடுவா’. ஷைனியின் நினைப்பு அவனுக்குப் பரவசமூட்டியது. ஒவ்வொரு நாளும் அவள் அவனை ஓரக்கண்ணால் பார்த்துக் கடந்து செல்லும் அந்த ஒற்றைக் கணத்துக்காகவே ஒரு நாள் முழுக்க மொட்டை வெயிலில் காய்ந்து நிற்கவும் அவன் தயாராக இருந்தான்.

ஏறத்தாழ ரவியின் உயரம் தான் இருந்தாள் என்பதால், ரவியால் எவ்வித மனக்கிலேசமுமின்றி அவளை அவனால் ரசிக்க முடிந்தது. உடனடியாக அவன் கண் முன்னே காய்ந்து வறண்டுப் போய் ஈயும் எறும்பும் மொய்த்துக் கொண்டிருந்த பொருளை என்னவென்று ஆராயும் எண்ணத்தை விட்டுவிட்டு ஷைனியைப் பார்க்கவேண்டி அந்தக் கூடைப்பந்து மைதானத்திலிருந்து கிளம்பி அவள் வரும் ஹாக்கி க்ரவுண்ட் நோக்கி நடந்தான். அவன் ஹாக்கி கிரவுண்டை அடையும்பொழுது, அவள் தோளில் கனமான முதுகுப்பையை சுமந்தபடியும், பையில் வைக்க இடமற்ற இரண்டு லாங்க் சைஸ் நோட்டை மார்போடு அணைத்தபடியுமாக, ஹாக்கி க்ரவுண்டைக் கடந்து ஃபுட்பால் க்ரௌண்டை நோக்கி நடந்துச் சென்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.

ஊசிப்புட்டான்

“ச்சே இந்தப் பூமணியால இன்னைக்கு லேட்டாகிடிச்சு” பூமணியைச் சபித்தபடியே அவளைப் பின் தொடரலானான்.

“நான் மட்டும் அந்த நோட்டா பொறந்திருந்தேன்னா” ஃபுட்பால் மைதானத்தின் தெற்கு மூலையிலிருந்து ஒரு குரல் கேட்டது.

“ஏய் ஷைனி” மற்றொரு குரல் அதே இடத்திலிருந்து சத்தமாகக் கேட்க, ஷைனி தன்னுடைய நடையின் வேகத்தை அதிகப்படுத்தினாள்.

“ஷைனி தான உன் பேரு” மீண்டும் அதே குரல் கேட்க, அந்தக் குரலுக்குப் பதிலாக, “அதனால தான மக்ளே இப்படி அத்து பிடுங்கிட்டு ஓடப் பாக்குறா”

என்றோரு குரல் வந்தது.

“ஆமா, என் மாப்ள மட்டும் அந்த நோட்டா பிறந்திருந்தா இதே மாதிரி நெஞ்சோட அணைச்சு கொண்டுட்டு போவியா… இல்ல” அந்தக் கூட்டத்திலிருந்து கலகலவெனச் சிரிப்பொலி கேட்க ஆரம்பிக்க, ஷைனி தலையைக் குனிந்தபடி அவளால் முடிந்தளவிற்கு வேகமாய் நடக்க ஆரம்பித்தாள்.

அவளைத் தொடர்ந்து வந்துக் கொண்டிருந்த ரவியின் காதுகளிலும் அந்தக் கூட்டத்தின் பேச்சுகள் விழ, அவனுள் இனி இவர்களுக்குப் பயந்து ஷைனி வேறு பாதையில் போக ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது என்கிற  எண்ணம் தலைத் தூக்கியது.

பயம் தான் இங்கே ஒவ்வொருவரின் சுயகுணமாக இருக்கிறது. தன்னைச் சுற்றி நடப்பவைகள் அனைத்தும் தன் கனவுகளை ஆசைகளை நசுக்கி நாசம் செய்யாதிருக்க வேண்டி, அது அந்த அனைத்தையும் நசுக்கி நாசம் செய்யத் தயாராகி விடுகிறது. இங்கே ரவிக்கும் பயம் உருவாக, சில வருடங்கள் முன்பு அவனது கனவில் கோரைப்பற்களில் ரத்தம் ஒழுக அவனை நோக்கி முன்னேறிய நாய் அவன்மேல் பாய்ந்தது.

ஷைனியைக் கிண்டல் செய்தவர்களைத் திரும்பிப் பார்த்தான். பைப்புவிளை ஜெகன் உட்பட நான்கு பேர் அமர்ந்திருந்தார்கள்.

“லேய் புடுக்கா” என்று ரவி கத்த, ஜெகன் அதிர்ந்து திரும்பிப் பார்த்தான்.

“என்னல சொன்ன” ஜெகன் கோபமாகக் கேட்க, “நீ புடுக்கன் ஜெகன் தானல” ரவியின் உள்ளே பயத்தின் படபடப்பு இருந்தாலும் குரலில் அதை வெளிக்காட்டாமல் ஜெகனை நோக்கி முன்னேறினான்.

“லேய் மாப்ள, இவன் நம்ம மத்தவன் அதான் எஸ் ஐ முத்தையாவோட ரொம்ப க்ளோஸ்ல. நம்ம ஜங்ஷன்ல அவங்கூட நின்னு டீக்குடிக்கத நான் பல தடவ பாத்திருக்கேன்” கூட்டதிலிருந்த ஒருவன் ஜெகனின் காதைக் கடித்தான்.

“இல்ல மாப்ள, இவன அப்பப்ப நம்ம கன்னியாகுமரி லிங்கத்துக்கு கூடயும் பாத்திருக்கேன். தேவயில்லாம கைய்ய வச்சு நாம சிக்கல்ல மாட்டிக்க வேணாம்” இன்னொருவன் ஜெகனை எச்சரித்தான்.

“லேய் புடுக்கா அந்தப் பிள்ளய பாத்து என்னல சொன்ன” ரவி ஜெகனை நோக்கி முன்னேறியபடியே இருந்தான்.

“லேய் இவன மாரி பொடிப்பயலுவல எல்லாம் பொடிப்பயலா இருக்கப்பவே தட்டி வச்சிடனும்ல இல்லேன்னா நானும் ஆளுதான்னு வந்து நமக்க முன்னுக்க நிப்பானுவ” ஜெகன் கர்ஜித்தான்.

“லேய் மக்கா நீயும் நானும் தெருவுக்குள்ள அடிகள வச்சுட்டு ஆளுன்னு காமிச்சுட்டு இருக்கோம். இவன் பின்னாடி இருக்கனுவ அப்படியில்ல. இவன் மேல கைய வக்கிறதுங்கிறதுங்கிறது நாய அடிச்சிட்டு பீய சொமக்குற மாதிரி.” உடனிருந்தவன் மீண்டும் எச்சரிக்க, ஜெகன் சற்றுப் பின்வாங்கினான்.

“லேய் புடுக்கா அந்தப் பிள்ளைய பாத்து என்னல சொன்ன நீ” ரவி சத்தமாக ஷைனியின் காதுக்குக் கேட்கும் படியாகச் சத்தமாகக் கேட்டான்.

ரவியின் நோக்கமறிந்து ஜெகன் பதிலெதுவும் சொல்லாமல் கோபமாக ரவியைப் பார்த்தபடியிருக்க, உடனிருந்தவன், “சும்மா கமெண்ட் பாஸ் பண்ணுகது தான ரெவி. இதுக்கெல்லாம் எதுக்கு போய்ச் சீரியஸாகிட்டு இருக்குவா” என்று நட்புக்கரம் நீட்டினான்.

தன் உருவத்தை மீறி எழுந்த குரலும், அந்தக் குரலுக்குத் தன்னைவிட உருவத்திலும், பலத்திலும் எண்ணிக்கையிலும் வலுவாயிருக்கும் கூட்டம் அடிபணிவதும், ரவியால் நம்ப முடியாமல் இருந்தது.

ஊசிப்புட்டான்

“தெருவுல போற எவளோ ஒருத்தியும் இவளும் ஒண்ணு கெடையாது தெரிஞ்சுக்கோ. இனி ஒருதரம் இந்தப் பிள்ளைய கிண்டல் பண்றத பாத்தேன்” ரவியின் குரலில் அதிகாரம் நிறைந்திருக்க, ஜெகன் இன்னும் கடுப்பானான்.

“இவ உன் மசன்னு எங்களுக்குத் தெரியாது ரவி. தெரிஞ்சிருந்தா கிண்டல் பண்ணிருக்க மாட்டோம்” ஜெகனோடு இருந்தவன் ரவியைச் சமாதனப்படுத்தும் நோக்கில் தன்மையாகக் கூற, ரவியும் சத்தமாக, “இனி இந்த வழியில எந்தப் பிரச்னையும் யில்ல” என்று ஷைனிக்கு கேட்கும் விதமாகச் சொல்லிவிட்டு, அங்கிருந்து நாயகப் பாவனையில் செல்லவும், “சின்னப்பயவுள்ள என்னய புடுக்கன்னு கூப்பிட்டதுமில்லாம என்ட்ட வந்து ஒடக்கிட்டு வேற போறான். நீங்க என்னடான்னா அவன் தலயில நாலு தட்டு தட்டி அனுப்பிவிடுதுக்கு யில்லாம அவனெ சமாதனப்படுத்தி அனுப்பிருக்கீங்க.” என்று ஜெகன் கோபமாக அவனுடனிருந்த நண்பர்களிடம் கத்தினான்.

“விடு மாப்ள. எங்களுக்கும் செம கடுப்பு மயிரா தான் இருக்குது. ஆனா இப்ப இவனுகிட்ட முகம் காட்டி அடிய வச்சிட்டு நாளைக்கு நாம நம்ம முகத்தையே காட்ட முடியாதளவுக்கு அடிய வாங்கிட்ருக்க முடியாது. நேரம் வரும் அப்ப இவனுக்கு இருட்டடிய போட்டுக்கலாம். இப்ப விட்டுத்தள்ளு” என்றான் அதுவரையிலும் எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்த தாஸ். 

ரவிக்கான முதல் எதிரி அன்றைய தினம் தான் உருவானான்.

(தொடரும்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.