‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் குறைவான நேரமே வெளியான காட்சிகளால் பாலிவுட் நடிகை ஆலியா பட், அப்செட்டில் இருப்பதாக தகவல் வெளியானநிலையில், அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் விளக்கம் அளித்துள்ளார்.
‘பாகுபலி’யின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படத்தை மெகா பட்ஜெட்டில் 3டி மற்றும் 2டி தொழில்நுட்பத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.
1920-ம் ஆண்டு காலக்கட்டத்தில், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய தெலுங்கு மாநிலத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களான, அல்லூரி சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உருவான கற்பனைக் கதைதான் ‘ரத்தம் ரணம் ரௌத்தரம்’ எனப்படும் ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம்.
இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண், ஆலியா பட், அஜய் தேவ்கன், ரே ஸ்டீவன்சன், ஒலிவியா மோரிஸ், சமுத்திரகனி, ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே, ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம் கடந்த 25-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
படம் வெளியான முதல்நாளில் மட்டும், மொத்தம் ரூ. 257.15 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து இந்தப்படம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ஆலியா பட்டிற்கு தென்னிந்திய திரையுலகில் ‘ஆர்.ஆர்.ஆர்.’ முதல் படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
ராம் சரணின் காதலியாக சீதா கதாபாத்திரத்தில் ஆலியா பட் நடித்திருந்தார். ஆனால், 3 மணி நேரத்துக்கும் அதிகமான காட்சிகளைக் கொண்ட படத்தில், ஆலியா பட் தொடர்பான காட்சிகள் சொற்ப நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தது, அவருடைய ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதனால், ஆலியா பட் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தொடர்பான அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட்டார் என்றும், இயக்குநர் ராஜமௌலியை பின்தொடர்பவர்கள் பட்டியலில் இருந்தும் நீக்கியுள்ளார் என்றும், அதே நேரத்தில், நடிகர் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை, அவர் இன்னும் பின்தொடர்கிறார் எனவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆலியா பட் விளக்கமளித்துள்ளார். அதில், “படக்குழு மீது உள்ள அதிருப்தியால், ‘ஆர்.ஆர்.ஆர்.’ படம் தொடர்பான பதிவுகளை, எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நான் நீக்கிவிட்டதாக தகவல்கள் பரவியதை அறிந்தேன்.
இன்ஸ்டாகிராமில் தற்செயலாக நடக்கும் விஷயங்களை வைத்து, அனுமானத்தின் பேரில் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைவரையும் நான் மனதார கேட்டுக்கொள்கிறேன். சீரற்ற முறையில் இருக்கும் எனது இன்ஸ்டாகிராம் பதிவுகளை, நான் எப்போதும் அடிக்கடி சீரமைத்துக்கொண்டே இருப்பேன்.
‘ஆர்.ஆர்.ஆர்.’ போன்ற பிரம்மாண்டப் படங்களில், நானும் நடித்துள்ளேன் என்பதை நினைத்து, எப்போதும் பெருமைப்படுகிறேன். சீதா கதாபாத்திரத்தில் நடிப்பதை நான் மிகவும் விரும்பினேன். ராஜமௌலி சார் இயக்கிய முறை எனக்குப் பிடித்திருந்தது. தாரக் மற்றும் சரண் ஆகியோருடன் பணிபுரிந்தது எனக்குப் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் நடந்த சின்ன சின்ன விஷயங்கள்கூட, எனக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்தது.
நான் கவலைப்படுவதற்கும், இந்த விஷயங்களை தெளிவுப்படுத்துவதற்கும் ஒரே காரணம் என்னவெனில், ராஜமௌலி மற்றும் படக்குழுவினர், இந்த அழகான படத்தை உயிர்ப்பிக்க பல ஆண்டுகளாக, தங்களது ஆற்றலையும், முயற்சியையும் கொடுத்து உழைத்துள்ளனர். அதனால் இந்தப் படத்தைப் பற்றியும், இந்தப் படத்தில் எனது அனுபவத்தை பற்றி வரும் தவறான தகவல்கள் அனைத்தையும் மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.