அபீசியாவால் பாதிப்பு: சினிமாவில் இருந்து விலகினார் புரூஸ் வில்லீஸ்
பிரபல ஹாலிவுட் முன்னணி நடிகர் புரூஸ் வில்லீஸ். அர்னால்ட், சில்வர் ஸ்டோலன், ஜாக்கிஷான், டாம் குரூசுக்கு இணையான புகழை பெற்றவர். 1987ம் ஆண்டு வெளியான பிளைண்ட் டேட் படத்தின் மூலம் புகழ்பெற்ற இவர், அதன் பிறகு டை ஹார்ட், லோடட் வெப்பன், போர் ரூம்ஸ், 12 மங்கீஸ், ஆர்மகடான், சிக்ஸ்த் சென்ஸ், அவுட் ஆப் டெத் உள்பட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது ஓடிடி தளத்திற்காக தயாராகும் 9 படங்களில் நடித்து வருகிறார். சில படங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இருக்கிறது. முதல் மனைவியும் ஹாலிவுட் நடிகையுமான டெமி மோரை திருமணம் செய்த அவர் அவரை விவாகரத்து செய்து விட்டு எம்மா ஹெம்மிங்கை திருமணம் செய்தார். இரு மனைவிகளுக்கும் சேர்த்து 5 வாரிசுகள் உள்ளனர்.
67 வயதான புரூஸ் வில்லிசுக்கு முதுமை காரணமாக அபீசிய நோய் வந்திருப்பதாகவும், இதனால் அவர் சினிமாவில் இருந்து முற்றிலும் விலகுவதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். இது ஹாலிவுட் மற்றும் அல்ல உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அபீசியா என்பது ஒரு வகை நினைவு மறத்தல் நோய். முன்னுக்கு பின் முரணாக பேசுவார்கள், அடிக்கடி வலிப்பு போன்ற பிரச்சினை இருக்கும். இது முதுமை காரணமாக மட்டுமில்லாமல் எப்போதோ தலையில் அடிபட்டு அது கவனிக்கப்படாமல் இருந்திருந்தால் கூட இது போன்ற பிரச்சினை ஏற்படும்.