பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்த நிலையில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ‘’முதலமைச்சராக பதவியேற்ற பின் எனது 3வது டெல்லி பயணம் இது. உடனடியாக நேரம் ஒதுக்கி என்னை சந்தித்த பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள். 14 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அளித்தேன். கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். பிரமருடனான சந்திப்பு மகிழ்ச்சி தருவதாகவும், மன நிறைவு அளிப்பதாகவும் அமைந்திருந்தது.
இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினேன். மேகதாது அணை விவகாரத்தில் நியாயமான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்தார்.
நீட் விலக்கு மசோதா தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் அழுத்தமாக கோரிக்கை வைத்தேன். குறிப்பாக நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் காலம்தாழ்த்துவதை சுட்டிக்காட்டினேன்.
தமிழ்நாட்டில் டிஆர்டிஓ ஆய்வுக்கூடம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தினேன்.
வெள்ள நிவாரண நிதியை உடனே வழங்கவேண்டும் என அமித்ஷாவிடம் வலியுறுத்தினேன்.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தினேன். மேலும் சென்னை மதுரவாயல் சாலையை ஸ்ரீபெரும்புதூர் வரை நீட்டிக்க மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தினேன்.
தமிழகத்தில் புதிய விமான நிலையம் அமைக்க மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்.
மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது. நாளை டெல்லி முதலமைச்சருடன் மருத்துவமனை மற்றும் டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட உள்ளேன்’’ என்று கூறினார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM