சென்னை: வன்னியர்களுக்கு 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து சரியானதே என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர்கள், கட்சியினர் என பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்திய பாமக தலைவர் ராமதாஸ் உச்ச நீதிமன்ற தீர்ப்பு சாதகமானதே என தெரிவித்துள்ளார்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கூறிய பல காரணங்களை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ள மறுத்து நிராகரித்து உள்ளது. இது மனநிறைவு அளிக்கிறது; எதிர்காலத்தில் இடஒதுக்கீடு சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
“தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணை செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு செல்லாது என்பதற்காக சென்னை உயர் நீதிமன்றம் பட்டியலிட்டுள்ள காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்து இருப்பது மனநிறைவளிக்கிறது; இடஒதுக்கீடு விரைவில் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையை அளிக்கிறது.
வன்னியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் நீதியரசர்கள் நாகேஸ்வரராவ், கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு அளித்துள்ள தீர்ப்பில், வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது செல்லாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கூட, அதையும் கடந்து பல சாதகமான அம்சங்கள் உள்ளன. வன்னியர்களுக்கு எதிர்காலத்திலும் கூட இடஒதுக்கீடு வழங்க முடியாதவாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ஏற்படுத்தியிருந்த முட்டுக்கட்டைகள், உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் அகற்றப்பட்டுள்ளன.
- 2018-ஆம் ஆண்டில் அரசியலமைப்புச் சட்டத்தில் 102-ஆவது திருத்தமும், 2021-ஆம் ஆண்டில் 105-ஆவது திருத்தமும் செய்யப்பட்டதற்கு இடைப்பட்ட காலத்தில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டத்தை இயற்றும் அதிகாரம், தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உண்டா?
- ஒரு சட்டம் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யாமல் அந்தச் சட்டத்தை திருத்த முடியுமா?
- அரசியலமைப்புச் சட்டத்தின் அம்சங்களை, குறிப்பாக 338-பி பிரிவைப் புறக்கணித்து விட்டு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விவகாரத் தில் எந்த முடிவையும் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
- சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டா?
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் வேலைவாய்ப்பு விகிதம், சமூக, கல்வி நிலைமை, மக்கள்தொகை ஆகியவை குறித்து கணக்கிடக்கூடிய அளவுக்கு புள்ளிவிவரங்கள் இல்லாத சூழலில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா?
- வன்னியர்களுக்கு 10.50% இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 16 ஆகிய பிரிவுகளை மீறியதா?
- எந்தவிதமான நோக்கக் காரணங்களும் இல்லாமல் மக்கள்தொகை குறித்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை மூன்று உட்பிரிவுகளாக பிரிக்க முடியுமா?
இந்த 7 வினாக்களை எழுப்பியிருந்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை, அவற்றின் அடிப்படையில்தான் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டைப் ரத்து செய்தது. ஆனால், உயர் நீதிமன்றம் கூறிய 7 காரணங்களில் ஐந்தாவது காரணம் தவிர, மீதமுள்ள 6 காரணங்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும்படி பரிந்துரைத்து வழங்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை மற்றும் கடிதத்தில் சில நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பதைக் காரணம் காட்டிதான் வன்னியர்கள் இடஒதுக்கீடு ரத்து செல்லும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு நினைத்தால், தெளிவான புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பரிந்துரை அறிக்கையை தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து பெற்று, புதிதாக சட்டம் இயற்றி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்பதுதான் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் பொருள் ஆகும். அந்த வகையில் இது சாதகமானதே.
- உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு
- மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள சாதிகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து இட ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை,
- ஒரு சாதிக்கு மட்டும் தனியாக இட ஒதுக்கீடு வழங்கலாம்,
- வன்னியர் உள் ஒதுக்கீட்டு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறத் தேவையில்லை,
- வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 9வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ள 69% இட ஒதுக்கீடு சட்டத்தை திருத்தத் தேவையில்லை,
- வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடைமுறைகளை பின்பற்றி வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியும். தமிழக அரசு அதை நிச்சயம் செய்யும் என்ற திடமான நம்பிக்கையும் எனக்கு உண்டு.
சமூகநீதியை வென்றெடுப்பது என்பது இன்று மழை பெய்தால் நாளை செடி முளைப்பது போன்றதல்ல. கடுமையான போராட்டங்களுக்குப் பிற குதான் சமூகநீதியை வென்றெடுக்க முடியும் என்ற அடிப்படை உண்மை எனக்குத் தெரியும். வன்னியர்களுக்கு சமூகநீதியை வென்றெடுப்பதற் காக 1980-ஆம் ஆண்டில் தொடங்கிய போராட்டம் இன்று வரை ஓயவில்லை. 1980-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் போராட்டம் நடத்தி, 21 இன்னுயிர்களை பலி கொடுத்து தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டை வென்றெடுத்தோம். நமது சமூகநீதிப் போர் இன்னும் ஓயவில்லை. வன்னிய மக்களுக்கு உரிய உள் இடஒதுக்கீட்டை பெற்றுக் கொடுக்காமல் நான் ஓய மாட்டேன்.
உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் புள்ளிவிவரங்கள் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகமிக பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் வன்னியர்கள் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதனால், தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரும் எவ்வளவு பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர் என்பது குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட வேண்டும் என்று 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து நான் வலியுறுத்தி வருகிறேன்.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு தமிழ்நாட்டின் சமூகநீதிச் சூழல் தெளிவாகியிருக்கிறது. தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை பெற்று வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடியும். அதற்கான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். வன்னியர்கள் இட ஒதுக்கீட்டு சட்டத்தை உடனடியாக மீண்டும் நிறைவேற்றுவதற்காக தமிழக அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும்.
இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து குறித்து திமுக எம்.பி.யும் மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன் கருத்து!