சென்னையில் ஒரே நாளில் சாலை விதிமுறைகளை மீறியதாக, உணவு விநியோக சேவை நிறுவன பணியாளர்கள் 978 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட மொபைல் ஆப் அடிப்படையிலான ஏராளமான உணவு விநியோக சேவை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மிகக் குறுகிய நேரத்தில் உணவை விநியோகிப்பதாக இந்த நிறுவனங்கள் உறுதி அளிக்கும் நிலையில், உணவை கொண்டு செல்லும் ஊழியர்கள் அதிவேகமாக செல்லுதல், சிக்னல்களை மீறுதல் உள்ளிட்ட சாலை விதிமுறைகளை மீறி வருகின்றனர். விதிமீறல்களை குறைக்கும் வகையில் காவல்துறை சார்பில், உணவு விநியோக ஓட்டுநர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதைத்தொடர்ந்து சென்னை பெருநகரில் வியாழக்கிழமை உணவு விநியோக சேவை பணியாளர்களுக்கான சிறப்பு தணிக்கை நடைபெற்றது. இதில் ஒரே நாளில் 978 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிக்னல்களை மீறிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM