புதுடெல்லி,
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டை வழங்க 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வெளியிட்டுள்ள வழிகாட்டுதலின்படி, 2022-ம் ஆண்டு மார்ச் 20 முதல் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 90 நாட்களுக்குள் மனுக்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் அதற்கு முன்பு நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரணம் கோரும் மனுதாரர்கள் 60 நாட்களுக்குள் மனுக்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் மனுக்களை சமர்ப்பிக்க இயலாதவர்கள், மாவட்ட வருவாய் அலுவலரிடம் முறையீடு செய்யலாம் என்றும், மனுக்களை, மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழு பரிசீலனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா இறப்பு நிவாரணம் கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் 30 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.