ஆந்திரா: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்கான சிறப்பு வரிசையில் அனுமதிக்க டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி காலை 11 மணிக்கு தேவஸ்தான இணையத்தில் ஆன்லைனில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேவஸ்தான மென்பொருளில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏப்ரல் 1ம் தேதிக்கு வழங்கப்படுவது ஏப்ரல் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஆயிரம் டோக்கன்கள் வீதம் ஆன்லைனில் வழங்கப்படுகிறது. டோக்கன் பெற்ற பக்தர்களை ஏப்ரல் 9 முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுருந்த இந்த சேவை மீண்டும் தொடங்கப்படுகிறது. டோக்கன்கள் பெற்ற பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கு சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணி நேரம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். எனவே மூத்தகுடிமக்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் நீண்டகால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இதை கவனத்தில் கொண்டு ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.