சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க, காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூர் மற்றும் பன்னூர் ஆகிய இரண்டு இடங்களை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அடையாளம் கண்டுள்ளது.
சென்னையில் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப அதிக விமானங்களை இயக்குவதற்காக, இரண்டாவது விமான நிலையத்திற்கு, கடந்த 10 ஆண்டுகளாக இடங்களைத் தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா, இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தை தேர்வு செய்து இறுதி முடிவு கொடுக்குமாறு, மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த இரண்டு இடங்களுமே காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளதால், அந்தப் பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களுக்கு உகந்த வகையில், இந்த விமான நிலையம் இருக்குமெனவும் கருதப்படுகிறது.
மொத்தமாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பு இந்த பகுதியில்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு, 7 முதல் 10 ஆண்டுகள் கால அவகாசம் ஆகும் எனவும், வரும் காலத்தில் இந்த விமான நிலையத்திற்கு, புறநகர் ரயில் சேவைகளை தொடங்குவதன் மூலம் எளிதாக பயணிகள் வந்து செல்ல முடியும் எனவும், விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
சென்னையில் இருந்து இந்த இரண்டு இடங்களும், 60-லிருந்து 70 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் எனவும், ஏற்கனவே உள்ள விமான நிலையமும் தொடர்ந்து செயல்படும் எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM