வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கீவ்,-உக்ரைனின் மரியுபோல் நகரில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்ததை தொடர்ந்து, அங்குள்ள மக்களை மீட்டு வர, 45 பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைன் ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர்.தாக்குதலில் இருந்து உயிர் பிழைக்க, ஆயிரக்கணக்கான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
இதற்கிடையே, ரஷ்யா – உக்ரைன் நாடுகளின் உயர் அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், துறைமுக நகரமான மரியுபோலில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்து உள்ளது.மரியுபோலில் உள்ள மக்கள் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக, ரஷ்ய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதைத்தொடர்ந்து, மரியுபோலில் சிக்கி உள்ள மக்களை மீட்டு வர, 45 பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதை, உக்ரைன் துணை பிரதமர் ஐரினா வெரெஷ்சுக் நேற்று உறுதிப்படுத்தினார்.இதேபோல், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர், மரியுபோலில் உள்ள மக்களுக்கு மருந்துகள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்க, அங்கு விரைந்துள்ளனர்.ரஷ்ய அதிபர் மீது விமர்சனம்ரஷ்யா – உக்ரைன் போர் துவங்கியது முதல், ரஷ்யாவை, அமெரிக்கா தொடர்ந்து விமர்சித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செயலர் கேட் பெடிங்பீல்டு நேற்று கூறியதாவது:உக்ரைன் மீது போர் தொடுத்து, ரஷ்ய அதிபர் விளாடி மிர் புடின் தவறு செய்துவிட்டார்.புடினை, ரஷ்ய ராணுவம் தவறாக வழிநடத்திவிட்டது. அதன் காரணமாகவே, இந்த மோசமான சூழல் ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
Advertisement