புதுடெல்லி: வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் நிரந்தர கணக்கு எண்ணுடன் (பான்) ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் மார்ச் 31-ம் தேதி ஆகும். இவ்விதம் இணைக்காதவர்களுக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இவ்விதம் இணைக்காத நிரந்தர கணக்கு எண் (பான்) ஓராண்டுக்கு செல்லுபடியாகும். இதன் மூலம் மார்ச் 2023 வரை வருமான வரி ரிட்டர்னை தாக்கல் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார்-பான் இணைப்பு கட்டாயம் என ஜூலை 1, 2017-ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும் மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) கடந்த 5 ஆண்டுகளாக கால அவகாசத்தை அடுத்தடுத்து நீட்டித்து வந்தது. தற்போது மார்ச் 31, 2022-க்குப் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படவில்லை.
2023 மார்ச் 31-க்குள் பான்-ஆதார் இணைக்கப்படாத கணக்குகளின் செயல்பாடுகள் முடக்கப்படும் என சிபிடிடி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பான்-ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை அறி வதற்கு பின்வரும் இணையதள முகவரிக்குச் சென்று சோதித்து அறிந்துகொள்ள முடியும்.
https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar
மேலேக் குறிபிட்ட இணையதளத்திற்கு சென்று உங்களது பான் எண் மற்றும் உங்களது பிறந்த தேதியை பதிவிட வேண்டும். பிறகு திரையில் தோன்றும் எழுத்துகளை பதிவிட்டால், உங்களது கார்டின் நிலவரம் தெரியவரும். ஒருவேளை பான் ஆதார் இணைக்கப்படாவிடில்
https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar
என்ற இணையதளத்திற்கு சென்று இணைக்கலாம்.
இந்த இணையதளத்திற்கு சென்று பான் எண், ஆதார் எண், செல் எண் ஆகியவற்றை பதிவிட வேண்டும்.
ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலத்தில் இணைப்பு செய்தால் ரூ. 500 அபராதம் செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு இணைப்பு செய்பவருக்கு ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படும் என்று சிபிடிடி அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜனவரி 24-ம் தேதி நிலவரப்படி மொத்தம் 43.34 கோடி பேர் பான்-ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆதார் கார்டு பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 131 கோடி. பான்-ஆதார் இணைப்பு மூலம் வரி ஏய்ப்பை தடுக்க முடியும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.