கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கருப்பு நிற தாளை கழுவினால் 500 ரூபாய் நோட்டு கிடைக்கும் என கூறி பொதுமக்களை ஏமாற்ற முயன்ற பெண் உள்பட 5 பேர் கொண்ட மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேட்டுக்குப்பம் ஆசிரமத்தில் சமையல் வேலை செய்து வந்த ராமசாமி என்பவர் நண்பர் தமிழிடம் தன்னிடம் கருப்பு நிறத்தில் உள்ள காகிதங்களை கழுவினால் அவை ரூபாய் நோட்டாக மாறும் என்றும் அதனை மாற்றித் தரும்படியும் கூறியுள்ளார்.
இதற்கு சம்மதம் சொன்ன தமிழ் தமக்கு தெரிந்த சிலரை ராமசாமி வரச் சொன்ன இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு ராமசாமி தன்னிடம் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் மீது கருப்பு மை அயோடின் சிங்கர் மற்றும் சோடா உப்பு கலவை தடவப்பட்டு இருந்ததை தண்ணீரில் கழுவி அவர்களிடம் காட்டிய போது அது நல்ல ரூபாய் நோட்டுகளாக மாறியது.
இதேபோல் பல கருப்பு தாள்கள் தன்னிடம் உள்ளதாகவும் இதனை கழுவினால் ஒரிஜினல் நோட்டாக மாறும் என மற்றவர்களிடம் குறைந்த விலைக்கு விற்று மோசடி செய்ய முற்பட்டுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த மோசடி கும்பலை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 112 கருப்பு நிற ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்ததில் ஐந்து நோட்டுகள் மட்டுமே நல்ல ரூபாய் நோட்டுகள் என தெரிய வந்தது.