இலங்கை, கடும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துவருகிறது. அந்நிய செலாவணி கையிருப்புகள் குறைந்துபோனதால், எரிபொருள் இறக்குமதி செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது. அங்கு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. நிலக்கரிப் பற்றாக்குறையால், மின் தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது. இதனால், இலங்கை முழுவதும் தினசரி 10 மணிநேரம் மின் வெட்டு அமலிலிருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் சீனாவின் ஆதரவோடு இலங்கை செயல்படுத்தவிருந்த மின் திட்ட ஒப்பந்தங்களைத் தட்டிப் பறித்திருக்கிறது இந்தியா! இது எப்படிச் சாத்தியமானது?
சீனாவின் கடன் வலை!
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட, சீனாவிடம் இலங்கை அரசு பெற்ற கடன்களும் முக்கியக் காரணங்களுள் ஒன்றாகச் சொல்லப்படுகிறது. பல்வேறு திட்டங்களுக்காக அளவுக்கு அதிகமான கடனை சீனாவிடமிருந்து பெற்றிருக்கிறது இலங்கை அரசு. இதனால், பல திட்டங்களுக்குச் சீனாவுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இலங்கை. இதன் காரணமாகச் சீன நிறுவனமான `சினோசோர் எடெக்வின்’ நிறுவனத்துக்கு இலங்கையின் நெடுந்தீவு, அனலைத்தீவு, நயினாதீவுகளில் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி செய்யும் ஒப்பந்தங்களை வழங்க முடிவு செய்திருந்தது இலங்கை அரசு.
தட்டிப்பறித்த இந்தியா!
தமிழ்நாட்டிலிருந்து 50 கி.மீ தொலைவிலுள்ள இந்தத் தீவுகளில் சீனாவின் மின்சாரத் திட்டம் வருவதற்குக் கவலை தெரிவித்திருந்தது இந்தியா. மேலும், இதே திட்டத்தைக் கடனாக இல்லாமல் மானியத்துடன் செய்துதர இந்தியா முன்வந்தது. எனவே, சீனாவுடனான ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தியது இலங்கை. இதனால் அதிருப்தியடைந்த இலங்கையிலுள்ள சீனத் தூதரகம், இலங்கை அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், இலங்கை நிதியமைச்சர் பசில் ராஜபக்சேவை நேரில் சந்தித்துப் பேசினார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர். இந்தச் சந்திப்பின்போது, கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, இந்தியா பல்வேறு பொருளாதார உதவிகள் செய்யத் தயாராக இருப்பதாக உறுதியளித்தார் ஜெய்சங்கர். ஏற்கெனவே பல்லாயிரம் கோடி ரூபாயை இலங்கைக்கு நிதியுதவியாக அளித்திருக்கிறது இந்தியா. இந்த நிலையில், மேலும் பொருளாதார உதவிகளைச் செய்ய இந்தியா தயாராக இருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது இலங்கை அரசு.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர், சீனாவுக்கு வழங்கப்படவிருந்த மின்சார உற்பத்தி திட்டங்களை, இந்தியாவுக்கு மாற்றி வழங்க இலங்கை அரசு முன்வந்தது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெய்ரீஸை சந்தித்தார். அப்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. தமிழர்கள் அதிகம் வாழும் வடகிழக்குப் பகுதியில் இந்தியா, மின் உற்பத்தி திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
இந்தியாவின் மூன்றாவது மின் திட்டம்!
ஏற்கெனவே இந்தியா சார்பில், இலங்கையின் கிழக்கு சாம்பூர் நகரில் தேசிய அனல்மின் நிலையத்தின் சூரிய மின் உற்பத்தி திட்டமும், மன்னார், பூனேரி பகுதிகளில் அதானி குழுமத்தின் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி திட்டங்களுக்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகியிருந்தன. அந்த வகையில், தற்போது வடகிழக்கு மாகாணத்தில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் இந்த ஒப்பந்தம் மூன்றாவது மின் திட்டம் ஒப்பந்தமாகும்.
முன்னதாக இலங்கையின் எதிர்க்கட்சியினர், “புறவாசல் வழியாக அதானி குழுமம் இலங்கைக்குள் நுழைவது, நம் நாட்டின் மின் உற்பத்தி முறையைச் சீர்குலைத்துவிடும். இந்தியப் பிரதமர் மோடி நிதியுதவி செய்வதால், இலங்கையின் வளங்களை அவரின் நண்பர் அதானிக்கு விற்க முடியாது” என்று அதானி குழுமத்துக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கியதும் குறிப்பிடத்தக்கது.
மின் திட்டம் கைமாறியது எப்படி?
இலங்கையில், இந்தியா செயல்படுத்தவிருக்கும் மின் திட்டங்கள் குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், “சீனா, இலங்கைக்கு ஏராளமான கடனுதவி வழங்கி, நாட்டைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறது. இனிமேலும் சீனாவிடம் உதவிபெற்றால், நாட்டையே அவர்களிடம் அடகு வைக்கும் நிலை ஏற்படும் என்பதை இப்போதுதான் இலங்கையின் ஆட்சியாளர்கள் உணர்ந்திருப்பதாகத் தெரிகிறது. எனவேதான், சீனாவிடம் கொடுக்கவிருந்த மின் திட்டங்களை இந்தியாவுக்கு மாற்றி வழங்கியிருக்கிறது இலங்கை அரசு. மேலும், இந்தியா கடனுதவி மட்டுமல்லாமல், சில திட்டங்களுக்கு மானிய உதவிகளும் வழங்குவதால், இந்தியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தும் முனைப்பிலிருக்கிறது கோத்தப்பய ராஜபக்சே அரசு” என்கிறார்கள்.