சுங்கக் கட்டணம் உயர்வு, ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச் சாவடிகளில் திடீர் கட்டண உயர்வை அறிவித்துள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு வாகனம் சுங்கச் சாவடியை கடந்து எவ்வளவு தொலைவு பயணம் செய்கிறது என்ற வரையறை இல்லாமல், ஒரு சுங்கச்சாவடியைக் கடந்தாலே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுங்கச்சாவடியை ஒட்டியுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் வணிகம் சார்ந்த மற்றும் வணிகம் சாராத பயன்பாட்டுக்கான வாகனங்களுக்கு தேவையில்லாமல் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலை நீண்டகாலமாகவே நிலவி வருகிறது.
இதனால் பல்வேறு மாவட்டங்களில் லட்சக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. சொந்த வேலைக்காக வெளியில் சென்று வரும் வாகனங்களுக்குக் கூட கட்டணம் வசூலிக்கப்படுவதால், உள்ளூர் குடியிருப்பு வாசிகளுக்கும் சுங்கச்சாவடி நிர்வாகத்திற்கும் தொடர்ச்சியாக மோதல் நிலவுகிறது.
60 கிலோ மீட்டருக்குக் குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச் சாவடிகளை, சட்டங்களுக்கு உட்பட்டு அகற்ற வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியிருந்ததது. இந்நிலையில், ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து சுங்கச் சாவடிகளின் கட்டணம் உயரும் என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உயர்வைத் தொடர்ந்து சுங்கக் கட்டணமும் உயர்த்தப்படுவதால் சரக்கு ஊர்திகள் வாடகை கட்டணத்தை உயர்த்தும். அதனால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாவார்கள்.
மக்கள் நலனுக்கு எதிராக உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டண உயர்வை ஒன்றிய பா.ஜ.க. அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என தெரிவித்துள்ளார்.