'மன்மத லீலை, இடியட்' வெளியீட்டில் சிக்கல்

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஏப்ரல் மாதம் 1ம் தேதியே சிக்கலுடன் ஆரம்பித்துள்ளது. இன்று தியேட்டர்களில் “செல்ஃபி, மன்மத லீலை, இடியட், பூ சாண்டி வரான்” ஆகிய படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றில் 'மன்மத லீலை, இடியட்' ஆகிய படங்களுக்கு காலை சிறப்புக் காட்சியாக 7.45, 8 மணி ஆகிய காட்சிகளுக்கான முன்பதிவும் நடைபெற்றது. இந்நிலையில் இந்தக் காலை காட்சிகள் திடீரென ரத்து செய்யப்பட்டது. தியேட்டர்கள் முன்பு காத்திருந்தவர்களுக்கு விரைவில் படம் வரும் என்ற தகவல் மட்டுமே தரப்பட்டது.

'மன்மத லீலை' படத்தைப் பொறுத்தவரையில் படத்தின் தயாரிப்பாளருக்கும் வெங்கட் பிரபுவுக்கும் இடையில் சிக்கல் என்கிறார்கள். இப்படத்தைத் தனது சொந்தத் தயாரிப்பு நிறுவனம் மூலம் வெங்கட் பிரபு முதல் பிரதி அடிப்படையில் தயாரித்துள்ளார். அவருக்குச் சேர வேண்டிய சுமார் 4 கோடி தொகையை படத்தின் தயாரிப்பாளர் தரவில்லை என சொல்லப்படுகிறது. தனது பணத்தைக் கொடுத்துவிட்டு பின் படத்தை வெளியிட்டுக் கொள்ளுங்கள் என்று வெங்கட் பிரபு தரப்பில் சொல்லப்பட்டதாம். இருப்பினும் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சமசரத்திற்கு வந்துள்ளனர். படம் இன்று காலை காட்சியும் வெளியாக வாய்ப்பில்லை. மதியக் காட்சி முதல் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

'இடியட்' படத்தை வெளியிட சில பல ஏரியாக்களில் தியேட்டர்களே கிடைக்கவில்லையாம். அந்த ஏரியாக்களைத் தவிர்த்து மற்ற ஏரியாக்களில் படத்தை எப்படி வெளியிடுவது என பின் வாங்கியுள்ளனர். இப்படம் பற்றிய அப்டேட் தகவல் விரைவில் வரும்.

இதனிடையே, அமெரிக்க நேரப்படி இரவு 7 மணி காட்சிகளுக்கு 'மன்மத லீலை' காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்கு படம் பார்க்கச் சென்ற ரசிகர்கள் காட்சிகள் ரத்தானதைத் தொடர்ந்து சமூகவலைதளத்தில் அது பற்றிய தகவல்களை வெளியிட்டனர். தமிழ் சினிமா இன்னும் திருந்தவில்லையா என்று அமெரிக்க தமிழ் சினிமா ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.