முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்னவின் மறைவு  –  பிரதமரின் இரங்கல் செய்தி 

அனுபவமிக்க அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான அதாவுத செனவிரத்ன அவர்களின் மறைவு செய்தி அறிந்து நான் மிகவும் வேதனையடைந்தேன்.

இடதுசாரி அரசியலின் செயற்பாட்டாளரான அதாவுத செனவிரத்ன அவர்கள், லங்கா சமசமாஜக் கட்சி ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்தார்.

ஆசிரியராக கடமையாற்றி வந்த அதாவுத செனவிரத்ன அவர்கள், 1954 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் பிரவேசித்தார்.

1970 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெலியத்த தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்ட போது, லங்கா சமசமாஜக் கட்சியின் ருவன்வெல்ல நாடாளுமன்ற உறுப்பினராக அதாவுத செனவிரத்ன அவர்கள் விளங்கினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆடைக் கட்டுப்பாடுடன் தொடர்புடைய காலனித்துவ மரபுகளை மாற்றுவதில் அதாவுத செனவிரத்ன முன்னிலை வகித்தார்.

அக்காலத்தில் சமகி பெரமுன அரசாங்கத்தில் செயற்பாட்டு உறுப்பினரான அதாவுத செனவிரத்ன சப்ரகமுவ மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் மாகாண சபையின் முதலமைச்சராகவும் விளங்கினார்.

அதாவுத செனவிரத்ன அவர்கள் 1999 ஆம் ஆண்டு லங்கா சமசமாஜ கட்சியில் இருந்து விலகி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினரானார். அதன் பின்னர் அதாவுத செனவிரத்ன மாவனல்லை தொகுதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராகவும் கேகாலை மாவட்ட அமைப்பாளராகவும் செயற்பட்டார்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தொழிலாளர் மற்றும் மனிதவள அமைச்சராக அதாவுத செனவிரத்ன உழைக்கும் மக்களுக்கு ஆற்றிய சேவையை நினைவுகூர வேண்டும்.

அரசியலில் இருந்து சற்று விலகியிருந்தாலும், அதாவுத செனவிரத்னவுக்கும் எனக்கும் இடையிலான நட்பு அவர் இறக்கும் வரை தொடர்ந்து இருந்தது. தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்று நீண்ட காலம் சமூக சேவையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த அதாவுத செனவிரத்ன அவர்கள், தனது வாழ்க்கையில் ஒரு பரோபகார அரசியல்வாதியின் பாத்திரத்தை வெளிப்படுத்திய தனித்துவமான ஆளுமை.

தனது 91ஆவது வயதில் காலமான அதாவுத செனவிரத்ன அவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும்! என பிரார்த்திப்பதுடன், அவரது மறைவால் துயருறும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

மஹிந்த ராஜபக்ஷ
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின்
பிரதமர்

பிரதமர் ஊடக பிரிவு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.