நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத அதிகாரிகளுக்கு சிறை தண்டனை விதிப்பதை பிரதானமாக இருக்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் விதிமீறல் கட்டடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்காமல் கடமை தவறியதாக கூறி, தெய்வசிகாமணி என்ற அரசு அதிகாரிக்கு மூன்று ஆண்டுகளுக்கான ஊதியத்தை நிறுத்தி வைத்து, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தெய்வசிகாமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாநகராட்சியின் உத்தரவை ரத்து செய்து, பணப்பலன்களை வழங்க வேண்டும் என்று, கடந்த 2013ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
‘நீதிமன்றத்தின் உத்தரவுகளை அரசு அதிகாரிகள் செயல்படுத்த வேண்டும், நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு அதிகாரிகளின் மீது அபராதம் விதிப்பது இரண்டாவது பட்சமாக இருந்தாலும், அவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பது பிரதானமாக இருக்க வேண்டும்’ என்று எச்சரிக்கை விடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர்.
மேலும், உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசியல் அரசு அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்து, அவர்களை பணி முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர வைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.