நெல்லை:
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது.
கடந்த 10 நாட்களாக தினந்தோறும் விலை உயர்வதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
வீட்டுக்கு பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து கடைகளுக்கு பயன்படுத்தும் வர்த்தக சிலிண்டரின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் ரூ.40 உயர்ந்த நிலையில் இன்று மேலும் ரூ.240 உயர்ந் துள்ளது.
இதனால் நெல்லை மாநகர பகுதிகளில் உள்ள டீக்கடைகளில் டீ, காபிகளின் விலை இன்று முதல் உயர்த்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளின் அறிவிப்புகள் செய்துள்ளனர். இது தொடர்பாக பாளை, குலவணிகர்புரம் ரெயில்வே கேட் பகுதியில் டீக்கடை நடத்தி வரும் முருகன் கூறியதாவது:-
கடந்த 10 நாட்களுக்கு மேலாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு லிட்டர் பால் ரூ.60-க்கு விற்கப்பட்ட நிலையில் ரூ.2 அதிகரித்து ரூ.62-க்கு விற்கப்பட்டது.
கடந்த 10 நாட்களுக்கு முன்பு மேலும் 2 ரூபாய் உயர்ந்து ரூ.64-க்கு விற்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திற்கு பின்னர் தேயிலையின் விலையும் கிலோவுக்கு ரூ.30 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.
இதே போல் டீ கப் விலை ரூ.30 முதல் 40 வரை உயர்ந்துள்ளது. வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை 1,915-க்கு வாங்கி வந்தோம். ஆனால் இன்று ரூ.240 உயர்த்தப்பட்டு உள்ளது. இதனை தவிர காலை, மாலை என ஒரு டீக்கடைக்கு 2 மாஸ்டர்கள் பணியமர்த்தப் படுகிறார்கள். அவர்களுக்கு ஊதியமாக தலா ரூ.500 கொடுக்கப்படுகிறது.
மேலும் கடைகளின் வாடகையும் அதிகரித்து வருகிறது. இப்படி பல்வேறு காரணங்களால் கடை உரிமையாளர்கள் பெரும் அவதியடைந்து வருகிறோம்.
எனவே வேறு வழியில்லாமல் எங்களது வாழ்வாதாரம் கருதி இன்று முதல் டீ, காபிகளின் விலையை உயர்த்துவது என முடிவு செய்துள்ளோம். கடந்த 2020-ம் ஆண்டு கொரோனாவுக்கு முன்னர் ஒரு டீ ரூ.8-க்கும், காபி ரூ.10-க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.
அதன் பின்னர் சிறிது உயர்ந்த நிலையில் தற்போது ஒரு டீ-க்கு ரூ.2-ம், காபிக்கு ரூ.1-ம் உயர்த்தி உள்ளோம். அதன்படி தற்போது ஒரு டீ 12 ரூபாய்க்கும், காபி 13 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போல் 25 ரூபாய்க்கு வழங்கப்பட்ட பார்சல் டீ, காப்பிகளின் விலையும் 10 ரூபாய் உயர்த்தப்பட்டு தற்போது 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது. எனவே விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு பொது மக்கள் தொடர்ந்து ஆதரவு தரு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்… நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு