கலவரமாக மாறிய போராட்டம்! தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு என இலங்கையில் பதற்றம்

இலங்கை அதிபர் இல்லத்திற்கு முன்பாக கலவரம் கட்டுப்பாட்டுக்குள் – 54 பேர் வரை கைது – 35க்கும் மேற்பட்டோர் காயம் – போராட்டத்தின் பின்னணியில் கடும்போக்குவாதிகள் செயற்பட்டதாக அதிபர் குற்றச்சாட்டு. இதனையடுத்து கொழும்பு நகரில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் 

கொழும்பு நுகேகொடை மிரிஹான பகுதியில் அதிபரின் இல்லத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. போலீஸ், இராணுவம், சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாற்றமடைந்ததையடுத்து, இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதனையடுத்து தற்போது, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, மத்திய கொழும்பு, நுகேகொட, களனி மற்றும் கல்கிசை ஆகிய பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு இன்று காலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளதாக போலீசார் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசு உதவத்தயார்: பிரதமரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின்

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனவும், இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து எதிர்கட்சி மற்றும் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

முன்னதாக அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் வீட்டிற்கு செல்லும் நுகேகொட, மிரிஹான-பெங்கிரிவத்தை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (மார்ச் 31) இரவு 7.30 மணியளவில் பொது மக்கள் போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு கோரியும், மக்களை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு காணுமாறு போராட்டகாரர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை நள்ளிரவு வரை தொடர்ந்த நிலையில், போராட்டத்தை கட்டுப்படுத்த போலீசார், சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் போராட்டம் நடந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஆனாலும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், அதனை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் மற்றும் நீர் பாய்ச்சல் பிரயோகம் மேற்கொண்டனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் சிறப்பு அதிரடிப்படையினர் வந்த பஸ் வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளனர்.

மேலும் அங்கு தொடர்ந்து ஏராளமானோர் போராட்டப் பகுதிக்கு வரத் தொடங்கிய நிலையில், போலீசார் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்த நிலையில் கண்ணீர்ப்புகை மற்றும் நீர் பாய்ச்சல் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட போதும், அத்தனையும் மீறி போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று அதிகாலை 12.45 மணியளவில் உடனடியாக அமுலாகும் வகையில் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்தி நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க: இலங்கையுடன் இந்தியா 6 உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டுள்ளது!

அதேநேரத்தில் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தால் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையிலும் மற்றும் களுபோவில கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வன்முறை சம்பவத்தில் காயமடைந்த சிறப்பு அதிரடிப்படையினர் 15 பேரும், நுகேகொட பகுதி ஏஎஸ்பி உட்பட 3 போலீசார் மற்றும் மூன்று செய்தியாளர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மிரிஹான பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதுடன் போலீஸ், இராணுவம், சிறப்பு அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதேவேளை, அதிபரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 53 ஆண்களும், ஒரு பெண்ணும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க: வாழத் தகுதியற்ற நாடாக மாறுகிறதா ‘இலங்கை’! ராமேஸ்வரத்துக்கு படையெடுக்கும் இலங்கை மக்கள்

(செய்திகள் சேகரிப்பு: JAFFER MOHAIDEEN)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.