பாட்னா: பீகாரில் பாஜக தலைமையில் ஆட்சி அமைக்கவும், அம்மாநில முதல்வரை துணை ஜனாதிபதியாக்கவும் பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி ஆட்சியானது முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிதிஷ்குமார் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படவுள்ளதாக பீகாரில் தகவல்கள் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து அம்மாநில அமைச்சர் சஞ்சய் குமார் ஜா வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘முதல்வர் நிதிஷ்குமார் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக வெளியான செய்தியானது வதந்தி; உண்மைக்கு புறம்பான இதுபோன்ற வதந்திகளை பரப்புவது யார்? அவர் பீகாருக்கு தொடர்ந்து சேவை செய்து வருவார்’ என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், ‘நிதிஷ் குமாரை துணை ஜனாதிபதியாக்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அவர் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார். அமைச்சராகவும் இருந்துள்ளார். மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அங்கு அதிக இடங்களை பாஜக கைப்பற்றியது. அதனால் அக்கட்சி முதல்வர் பதவிக்கான காய் நகர்த்தலை மேற்கொண்டுள்ளது. நிதிஷ்குமாரை துணை ஜனாதிபதியாக்கி டெல்லிக்கு அனுப்பிவிட்டால், எளிதாக பீகாரில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமையும். பாஜக தங்களது தரப்பில் முதல்வரை அறிவிக்கும். இந்த அரசியல் அதிகார பகிர்வுக்கு நிதிஷ்குமார் ஒத்துக் கொண்டாரா? என்பது தெரியவில்லை. ஆனால், அதற்கான வேலைகளில் பாஜக ஈடுபட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த பதவிக்கான பிரபலங்களை பாஜக தேடி வருகிறது’ என்று அந்த வட்டாரங்கள் கூறின.