* ஒரு வழியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார் உதயநிதி. இனி படங்களில் அதிகம் நடிப்பதை குறைத்துக் கொண்டு, நல்ல படங்களை வெளியிடும் பணியை மட்டும் செய்யப் போகிறாராம். கமலின் ‘விக்ரம்’ படத்தை வாங்கியதும் இந்த பிளானில்தான். அந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் வெளியிடுவார்களா எனக் கமல் தரப்பில் தயக்கம் காட்டிய போது, “கமல் சாருக்கு அந்தக் கவலையே வேண்டாம். எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார் உதயநிதி. இன்னொரு விஷயம், இனிமேல் அவர் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படம் நடித்தாலே பெரிய விஷயம் என்கிறார்கள். அரசியல் ஆட்டம் ஆரம்பம்!
* இயக்குநர் ராம், நிவின் பாலி இணைந்துள்ள படத்திற்குத் தலைப்பு இன்னும் சூட்டவில்லை. படப்பிடிப்பு சென்னையில் படுவேகமாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் வைத்த டைட்டில் ‘ஒரு புலி ஒரு முயல் ஒரு மான்’. ஆனால், நினைத்ததைவிட படம் பெரிய ஸ்கேலில் ஆகிவிட்டதால், இப்போது செம மாடர்னாக டைட்டில் வைக்கவேண்டும் என யோசித்து வருகிறார்களாம். மாடர்ன் லவ்!
* அஜித்தின் படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வரப்போவதாக அதிகாரபூர்வமான செய்திகள் வந்தன. அது தொடர்பாக இப்போது, “படம் ஆரம்பமாவதற்கு முன் படத்தின் மொத்த ஸ்கிரிப்டையும் என் கையில் கொடுத்துவிடுங்கள். படித்து விடுகிறேன்” என்று அஜித் புது நிபந்தனை வைத்திருக்கிறார். இதனால் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவசர அவசரமாக முடித்துவிட்டார் விக்னேஷ் சிவன். இப்போது பக்கா பவுண்டட் ஸ்கிரிப்ட்டை ஒன்றை ரெடி செய்து வருகிறார். காத்து வாக்குல காதலோட கதையும் வரட்டும்!
* முழு நேர டைரக்ஷனில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ‘பயணி’ மியூசிக் ஆல்பத்திற்குப் பிறகு, இந்தியில் ‘ஒ சாதி சல்’ என்ற காதல் கதையை இயக்குகிறார். ‘பதாய் தோ’ படத்தின் ஹீரோ ராஜ்குமார் ராவ், இதில் ஹீரோவாக கமிட் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு, தமிழில் லைகாவின் தயாரிப்பிற்கு வருகிறார். அதில்தான் ராகவா லாரன்ஸ் ஹீரோ. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஃபுல் சப்போர்ட்!
* நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின் சேகர், மீண்டும் ஹீரோவாக களம் இறங்குகிறார். ‘மணல்கயிறு 2’வுக்குப் பிறகு இப்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தின் பெயர் ‘டூ பீஸ்’. இன்னொரு படத்தின் பெயர் ‘சேவற்கொடியோன்’. இதில் ‘டூ பீஸ்’ டைட்டில் கில்மாவாகத் தெரிந்தாலும், இன்னர் கார்மென்ட்ஸ் வியாபாரம் செய்யும் இளைஞனைப் பற்றிய கதையாம். விற்பனை களைகட்டட்டும்!
* சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்துக்குப் பின், படுபிஸியாகிவிட்டார் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி. அடுத்து அவர் சந்தானம், விஜய் சேதுபதி, பிரபுதேவா உள்பட பலரின் படங்களைக் கைவசம் வைத்திருக்கிறார். கால்ஷீட் விஷயங்களையும் அவரேதான் கவனித்துக்கொள்கிறார். மேனேஜர் யாரையும் நியமிக்கவில்லை. ஆனாலும் படப்பிடிப்புக்கான தேதிகள் சொதப்பாமல் இருப்பதுடன் சொன்ன தேதியில், சொன்ன நேரத்தில் ஷூட்டிங்கிற்குச் சென்றுவிடுகிறார். இதனால் எல்லா இயக்குநர்களிடம் ‘சபாஷ்’ வாங்கிவிடுகிறாராம். ஒரு நாயகன்…
* ஐஸ்வர்யா ராஜேஷின் ‘கனா’வை சீனமொழியில் வெளியிட்டனர். அங்கே படத்திற்கு செம ரென்பான்ஸாம். அதனைத் தொடந்து சிம்புவின் ‘மாநாடு’ம் சீன மொழி பேசவிருக்கிறது. இதற்கான ஆரம்ப வேலைகள் நடந்து வருகிறதாம். ஹாங்காங்கில் உள்ள ஒரு நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இதற்கான ஒப்பந்தத்தைப் போட்டுவிட்டார் என்கிறார்கள். இந்த வருட கடைசிக்குள் சீனாவில் ‘மாநாடு’ வெளியாகுமாம். டி.ஆர் பர்மிஷன் வாங்கியாச்சா?
* இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து சில குறிப்பிட்ட கோயில்களுக்கு அஜித் செல்லப்போவதாகச் சொல்கிறார்கள். இது குறித்து அவர் பல பெரியவர்களிடமும் கலந்து பேசி சக்தி வாய்ந்த தெய்வங்களையும் அவற்றின் மகத்துவத்தையும் கேட்டு வருகிறாராம். குறிப்பிட்ட எட்டு கோயில்களைத் தேர்வு செய்து கொடுத்திருக்கிறார்கள். அந்தக் கோயில்களில் தரிசனம் முடித்து விட்டுத்தான் வினோத்தின் அடுத்த படத்தில் களமிறங்குகிறார் அஜித். குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு தலங்களைத் தரிசிப்பது கடினம் என்பதால் நண்பர்களோடு மட்டும்தான் இந்தப் பயணம் என்கிறார்கள். ரோடு டிரிப் டு டெம்பிள்ஸ்!