அசாமில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிட்ட 2 பாஜக உறுப்பினர்களும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 100-ஐ தொட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக காங்கிரஸ் மற்றும் பாஜகவின் மாநிலங்களவை பலம் 100-ஐ தொட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக இரண்டு முறை மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும், மாநிலங்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. ஆனாலும், பிஜு ஜனதா தளம் மற்றும் ஒய்எஸ்ஆர்காங்கிரஸ் போன்ற கட்சிகளின் ஆதரவுடன் மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் அசாம் மாநிலத்தில் நடைபெற்ற இரண்டு உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை தேர்தலில், பாஜக ஒரு இடத்தை கைப்பற்றும் என சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணிக்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் பல சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் திசை திருப்பி, இரண்டாவது இடத்தையும் பாஜக கைப்பற்றியுள்ளது. இதைத் தவிர, நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களிலிருந்து தலா ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பாஜக வென்றுள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலங்களவையில் அந்தக் கட்சிக்கு தற்போது 100 உறுப்பினர்கள் உள்ளனர்.
245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் இப்போதும் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்றாலும், முப்பது வருடங்களில் நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக தற்போது உருவெடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போதும், அந்தக் கூட்டணிக்கும் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாதது குறிப்பிடத்தக்கது. 1990-ம் ஆண்டில்தான், காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. படிப்படியாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பல்வேறு மாநிலங்களை பாஜக கைப்பற்றியதை தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பலம் மாநிலங்களவையிலும் தொடர்ந்து தேய்ந்து வருகிறது.
இந்த ஆண்டு, மாநிலங்களவையின் 72 உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்ட கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட ஐந்து நபர்கள் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பாஜக முன்பு ஒரே ஒரு உறுப்பினரை கொண்டிருந்த நிலையில், தற்போது அந்தக் கட்சி சார்பாக யாரும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படவில்லை. அதே சமயத்தில், பிற மாநிலங்களில் பாஜக சார்பாக தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், உத்தராகண்ட் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளதால், பாஜக வேட்பாளர்கள் இந்த மாநிலங்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநில பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 11 மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்த வருடம் ஓய்வுபெறும் நிலையில், காலியாகவுள்ள 8 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், மீதமுள்ள மூன்று இடங்கள் சமாஜ்வாதி கட்சி வசமாகும் எனவும் கணிக்கப்படுகிறது. 2014-இல் 55 மாநிலங்களவை உறுப்பினர்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, இந்த ஆண்டு இறுதிக்குள் தனது பலத்தை கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என கருதப்படுகிறது. அதிகரிக்கும் இந்த மாநிலங்களவை எண்ணிக்கை பாஜகவுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணை தலைவர் தேர்தல்களிலும் கைகொடுக்கும்.
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து தங்களுடைய மாநிலங்களவை பலத்தை பெருக்கி வருகின்றன.
அதிமுகவை சேர்ந்த நவநீதகிருஷ்ணன், எஸ் ஆர் பாலசுப்பிரமணியம் மற்றும் விஜயகுமார் இந்த ஆண்டு ஓய்வு பெறும் நிலையில், தமிழகத்திலிருந்து அதிமுக சார்பாக 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவர் என கருதப்படுகிறது. அதே சமயத்தில், திமுகவின் மூன்று மாநிலங்களவை உறுப்பினர்கள் ஓய்வு பெறும் நிலையில், அந்த கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்கள் புதிதாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற சூழல் நிலவுகிறது.
– கணபதி சுப்பிரமணியம்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM