`10.5% உள் இட ஒதுக்கீடு… துபாய் விசிட்' – விழுப்புரத்தில் திமுக அரசைச் சாடிய சி.வி.சண்முகம்

விழுப்புரத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், “10.5% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதற்கான விசாரணையில் எடுத்துக்கொள்ளப்பட்ட இரு காரணங்கள்… மாநில அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லையா; இட ஒதுக்கீடு வழங்குவதற்கு முழுமையான தரவுகள் இருக்கிறதா? என்பதுதான்.

10.5% இட ஒதுக்கீடுக்கு எதிரான வழக்கில், முன்பு மதுரை உயர் நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பில், `மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. முழுமையான தரவுகள் இல்லை’ என சொல்லப்பட்டது. அதற்கான காரணம், நம்மிடம் இருப்பது 1985-ல் அம்பாசங்கர் ஆணையத்தால் எடுக்கப்பட்ட சாதிவாரியான கணக்கெடுப்பு தரவுகள் மட்டுமே.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

அதன் அடிப்படையிலேயே தான், எம்.பி.சி என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. 39 சாதி மக்களை எம்.பி.சி என்றும், 68 சாதி மக்களை டி.என்.சி என்றும் பிரித்து அறிவிக்கப்பட்டனர். அந்த ஆணைய அறிக்கையின் அடிப்படையிலேயே, 1989-ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 50% என இருந்த ஒரு இட ஒதுக்கீடு பிரிக்கப்பட்டு, எம்.பி.சி பிரிவினருக்கு அதில் 20% என உருவாக்கப்பட்டது. அந்த கணக்கெடுப்புக்கு பின்னர், எந்தவிதமான சாதிவாரியான கணக்கெடுப்பும் எடுக்கப்படவில்லை.

அப்படி இருக்கும்போது, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்ற சமயத்தில் அம்பாசங்கர் ஆணைய அறிக்கையை ஏன் இந்த அரசு தாக்கல் செய்யவில்லை. அது கவனக்குறைவா? இல்லை திட்டமிட்டு செய்யப்பட்டதா? என்று இந்த அரசு தெளிவுப்படுத்த வேண்டும். அதனால்தான் மதுரை உயர் நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பை வழங்கியது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் தான் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறுகிறது. ஆகவே, மதுரை நீதிமன்றம் சொன்னதை உச்ச நீதிமன்றமும் அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறது. `மாநில அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொல்லியிருந்தாலும், முழுமையான தரவுகள் இல்லை’ எனவும் சொல்லியிருக்கிறது.

சி.வி.சண்முகம்

‘அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கை காலம் கடந்துவிட்டது. 30 ஆண்டு காலம் ஆகிவிட்டது’ என்று சொல்கிறார்கள். நீதிமன்றமும் ஒரு கருத்தைச் சொல்கிறது.

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும், 1931ம் ஆண்டு எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில்தான் இட ஒதுக்கீட்டை வழங்கிவருகிறது. 2011-ல் மன்மோகன் சிங் ஆட்சியின் போது சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அது வெளியிடப்படவில்லை. அப்படியிருக்க, ‘அம்பாசங்கர் கமிஷன் அறிக்கையை ஏற்றுக் கொள்ளமாட்டோம்’ என்கிறார்கள். அப்படியென்றால், ஏன் இதையெல்லாம் தமிழக அரசு நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தவில்லை.

இன்றைய முதலமைச்சரின் தந்தை கருணாநிதி ஆட்சியில், 69% இட ஒதுக்கீடு தொடர்பாக 2010-ம் வருடம் உச்ச நீதிமன்றம் கேள்வி கேட்டபோது, `எங்களிடம் அம்பாசங்கர் கவுன்சில் அறிக்கை இருக்கிறது. அதன் அடிப்படையில் தான் 69% இட ஒதுக்கீடு வழங்கினோம்’ எனச் சொல்லப்பட்டது. உச்ச நீதிமன்றமும் அதை ஏற்றுக்கொண்டது. அதன்பின்பு அ.தி.மு.க ஆட்சியில் அந்த அறிக்கை கமிஷனில் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர், இன்றுவரை 69% இட ஒதுக்கீட்டை காப்பாற்றி வருகிறோம்.

உச்ச நீதிமன்றம்

`முழுமையான தகவல்களைப் பெற வேண்டும். சாதிவாரியான கணக்கெடுப்பு எடுக்க வேண்டும்’ என 2010-ல் உச்ச நீதிமன்றம் மற்றொரு கருத்தையும் கூறியிருந்தது. அதன்பின்பு அது செயல்படுத்தப்படாமல் இருந்துவந்தது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற சமயத்தில், `69% இட ஒதுக்கீட்டுக்கான இறுதிக்கட்ட விசாரணை எப்போது வேண்டுமானாலும் உச்ச நீதிமன்றத்தில் வரலாம்’ என்பதற்காக 21.12.2020 அன்று, புதிய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு குணசேகரன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்தார். ஆனால், ஆட்சி மாற்றம் வந்து தி.மு.க பொறுப்பேற்றதும் அந்த ஆணையம் முடக்கப்பட்டது. அது ஏன்?

அந்த ஆணையம் முறையாக செயல்பட்டிருந்தால், கணக்கெடுப்பு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்திருக்கும். அரசுக்கு முழு தரவுகளும் கிடைத்திருக்கும். அதை உச்ச நீதிமன்றத்தில் கூறியிருந்தால், இன்று 10.5% இட ஒதுக்கீட்டை நாம் காப்பாற்றியிருக்கலாம். இப்போது நமக்குத் தேவை 69% இட ஒதுக்கீட்டையாவது காப்பற்ற வேண்டும். இதைக்கூட கருத்தில் கொள்ளாமல், இந்த அரசு காழ்ப்புணர்ச்சி காரணமாக குணசேகரன் ஆணையத்தை முடக்கியிருக்கிறது. இன்று கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பை போல, நாளை 69% இட ஒதுக்கீடும் பாதிக்கும். ஆகவே, இந்த அரசு மீண்டும் அந்த ஆணையத்தை செயல்படுத்த வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீட்டை நாம் காப்பாற்ற முடியும், என்பதை தமிழக முதலமைச்சர் தெரிந்துகொள்ள வேண்டும்.

C.V.Shanmugam

அதேபோல, 10.5% இட ஒதுக்கீடு வழக்கில், தமிழக அரசின் சார்பில் ஏன் ஒரு மூத்த வழக்கறிஞர்களை கூட அழைத்து வாதாடவில்லை. அதிமுக கொண்டுவந்த சட்டம் என்பதால் கண்டும் காணாமல் இருக்கிறார்களா? வேறு ஏதேனும் ஆதாய நோக்கமா…? பொதுமக்களை பாதிக்கும் வழக்குகளை துச்சமாக நினைக்கிறது இந்த அரசு. அப்படித்தான் இந்த 10.5% இட ஒதுக்கீடு வழக்கிலும் நடந்துள்ளது. எனவே இந்த அரசு தன் தவறுகளை திருத்திக்கொண்டு, சாதிவாரியான கணக்கெடுப்பு செய்வதற்காக அமைக்கப்பட்ட குணசேகரனின் ஆணையத்தை செயல்படுத்த வேண்டும். அந்த ஆணையம் அளிக்கும் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, நல்லதொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

துபாயில் ஸ்டாலின்

பின்பு, செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சி.வி.சண்முகம், “தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ளன. இன்று விழுப்புரம் மாவட்டத்திலே 10-ம் வகுப்பு மாணவியை 10 பேர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். இதுதான் திமுக அரசின் சாதனை. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…. இன்று பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. காவல்துறை என்ன செய்துகொண்டிருக்கிறது? ‘ஆபரேஷன் 2.O’ என பெயர் வைத்திருக்கிறார்கள். பெயர் வைத்தால் கஞ்சா, பாலியல் வன்கொடுமை முடிந்துவிடுமா? நடவடிக்கை எங்கே.. எனவே, இதுபோன்ற கூட்டு பாலியல் வன்முறைகளை கண்டித்தும், தாலிக்கு தங்கம் ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும் விழுப்புரம் மாவட்டத்தில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் விரைவில் நடத்தப்படும். தமிழக முதலமைச்சர், துபாய்க்கு முதலீடு செய்ய போனார்…. முதலீட்டை ஈர்க்க போகவில்லை. முதலீடு இங்கிருந்து சென்று, மீண்டும் இங்கேயே வருவதற்கு பெயர் முதலீடு அல்ல” என்றார் காட்டமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.