சண்டிகர் :சண்டிகரை பஞ்சாபிடம் ஒப்படைக்கக்கோரும் மசோதா, பஞ்சாப் சட்டசபையில், நிறைவேற்றப்பட்டது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில், ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்திற்கும், ஹரியானாவுக்கும், ஒரே தலைநகராக சண்டிகர் உள்ளது.
யூனியன் பிரதேசமான சண்டிகரை மேம்படுத்த, மத்திய அரசு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
சமீபத்தில், சண்டிகரில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டுவரும் அறிவிப்பை, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார்.இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பகவந்த் மான், ‘மத்திய சேவை விதிகளால், சண்டிகர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும் ஆபத்து உள்ளது’ என, குற்றஞ்சாட்டினார்.
இந்நிலையில், பஞ்சாப் சட்டசபையில், இன்று (ஏப்.01) ஒரு நாள் சிறப்பு கூட்டத் தொடர் நடந்தது. அதில், சண்டிகரை உடனடியாக பஞ்சாபுடன் இணைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. அதற்கான மசோதாவை தாக்கல் செய்து,பகவந்த் மான் கூறியதாவது:சண்டிகரை பஞ்சாபிடம் ஒப்படைக்கக்கோரி, பல முறை மசோதா தாக்கல் செய்யப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
மக்களின் உணர்வுகள் மற்றும் சமூக நல்லிணக்கத்தை கருத்தில் வைத்து, மீண்டும் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எங்கள் கோரிக்கையை, மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Advertisement