தெலங்கானாவில் பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நோயாளியை எலி கடித்ததால், பணியில் இருந்த 2 மருத்துவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், கண்காணிப்பாளர் இடமாற்றமும் செய்யப்பட்டார்.
தெலங்கானா மாநிலத்தின் வாரங்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நோயாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டார். பல உடல் உறுப்புகள் செயலிழந்ததால் நான்கு நாட்களுக்கு முன்பு அவரை அதே மாவட்டத்தில் உள்ள அரசு நடத்தும் எம்ஜிஎம் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்தார் அந்த நோயாளி.
இந்நிலையில், நோயாளியின் உடலில் எலி கடித்தது போல காயம் இருந்ததும், உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்துடன் வாக்குவாதம் செய்தனர்.
நோயாளியின் உதவியாளர் நோயாளியின் கணுக்கால் மற்றும் குதிகால்களில் இரத்தப்போக்கு இருப்பதைக் கண்டதாக புகார் கூறினார். கூறப்படும் சம்பவம் நடந்தபோது உதவியாளர் தூங்கிக்கொண்டிருந்தார். நோயாளியின் உதவியாளர் எலிகளைப் பார்க்கவில்லை என்றாலும், எலி கடித்ததாக சந்தேகம் எழுப்பி புகாரை அளித்தார். இதையடுத்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணைக்கு பிறகு மருத்துவமனை கண்காணிப்பாளரை இடமாற்றம் செய்ததுடன், பணியில் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி இரண்டு மருத்துவர்களை பணி இடைநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.
எலிகள் வருவதற்கு மருத்துவமனை வளாகத்தில் எஞ்சியிருந்த உணவுப் பொருட்கள், பழைய வடிகால் அமைப்பு போன்றவையும் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவமனை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மருத்துவமனை துப்புரவு முகமைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநில சுகாதார அமைச்சர் டி ஹரிஷ் ராவ் சம்பவம் குறித்த முழு விவரங்களையும் கேட்டறிந்தார், மேலும் நோயாளியை நல்ல சிகிச்சையுடன் கவனித்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM