ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சியில் நகை கடன் தள்ளுபடியில், உயரதிகாரிகளுக்கு பணம் கொடுப்பதற்காக, பயனாளிகளிடம் 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை லஞ்சம் கேட்கும் செயல் அலுவலர் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, நாங்கள் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தது. இந்நிலையில், தற்போது திமுக ஆட்சி அமைந்தவுடன், 5 பவுன் நகைகள் தள்ளுபடிசெய்து, தற்போது கூட்டுறவு சங்கத்தில் பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி கூட்டுறவு சங்கத்தில், நகை தள்ளுபடியான பயனாளிகள், நகைகளை பெறுவதற்கு கூட்டுறவு சங்கத்திற்கு சென்றபோது, செயல் அலுவலர் கோவிந்தன் பயனாளிகளிடம் 2 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை பணம் செலுத்த வேண்டும் எனக்கூறி, லஞ்சம் கேட்கும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மேலும் வீடியோவில் அவர் பேசியதாவது, “நீங்கள் என்னுடைய உறவினர் என்பதால், 2000 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும். மற்றவர்கள் எல்லாம் நான்காயிரம் முதல் 6000 ரூபாய் வரை செலுத்தி வருகின்றனர்” எனக் கேட்பதாக அந்த வீடியோவில் உள்ளது. மேலும் பயனாளி, எதற்கு நாங்கள் பணம் தர வேண்டும் என்று கேட்டபோது, அதற்கு செயல் அலுவலர் கோவிந்தன், நாங்கள் உயர் அதிகாரிகளுக்கு பணம் செலுத்த வேண்டும் என்றும், அதற்காக தான் பணம் வசூல் செய்கிறோம் எனவும் கூறுகிறார்.
தற்போது கூட்டுறவு சங்க செயல் அலுவலர் லஞ்சம் கேட்கும் வீடியோ தற்போது வேகமாக பரவி வருவதால், பயனாளிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தமிழக அரசு தற்போது நகை கடன் தள்ளுபடி செய்து வருவது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு செயல் அலுவலர், லஞ்சம் கேட்பது தமிழக அரசின் மீது அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக இருப்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM