புதுடெல்லி: ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் இந்தியாவின் அதிகாரமிக்க 100 பிரமுகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார்.
கரோனா பரவல், 3 புதிய வேளாண் சட்டங்கள் போன்ற சில காரணங்களால் பிரதமர் மோடியின் செல்வாக்கு சரிந்துவிட்டதாக விமர்சகர்கள் கூறிவந்தனர். ஆனால், 5 மாநில தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வென்றது, உக்ரைனில் சிக்கிய இந்தியர்களை மீட்டது, கரோனா தடுப்பூசியை பரவலாக கொண்டு சேர்த்தது போன்ற நடவடிக்கைகள் மோடியின் செல்வாக்கை மேலும் உயர்த்தியுள்ளது என்று அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
இரண்டாவது இடத்தில் அமித் ஷா உள்ளார். மூன்றாவது இடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்ளார். நான்காவது இடத்தில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே பி நட்டாவும், ஐந்தாவது இடத்தில் முகேஷ் அம்பானியும் உள்ளனர். சென்ற ஆண்டு பட்டியலில் 13-வது இடத்தில் இருந்த யோகி ஆதித்யநாத் இம்முறை 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.