ஒரு போஸ்டர் அடிக்கணும், வீடு வாடகைக்கு இருக்குணு சொல்லணும்னா ஒரே அடியா ஒரு பெரிய மரத்தப் பாத்து சுத்தியலும் ஆணியுமா கெளம்பி போய்றது! யாரு? அட நாம தாங்க…
மரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்று உணர்ந்து கொண்ட இனி மேல் மரத்தில் ஆணி அடிக்கும் நபர்களை கண்டுபிடித்து தரவும், ஏற்கனவே அடிக்கப்பட்டிருக்கும் ஆணிகளை பிடுங்கவும் ஒரு குழு ஒன்றை உருவாக்கி அதற்கு திருவிழா ஒன்றும் நடத்தி வைரலாகியுள்ளனர். தேனியில் நடைபெறும் இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது என்றே கூறலாம்.
சாலையோரங்களில் வளர்ந்துள்ள பல மரங்களில் தொடர்ச்சியாக ஆணி அடித்து விளம்பரங்கள் வைக்கப்படுவதால் மரங்கள் பட்டுப்போகின்றன. இதனை தடுத்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்தால், அவர்களுக்கு ஆயிரம் ரூபாயும், புகார் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யும் பட்சத்தில் புகார்தாரருக்கு ரூ. 5,000-யும் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர் என்பது இதில் ஹைலைட்டான விசயம்.
”மரங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு நோக்கத்தில் மட்டுமே இந்த பரிசுத் தொகையை அறிவித்துள்ளோம். ஒரு நபர் எத்தனை காவல் நிலையங்களிலும் புகார் செய்யலாம். முதல் புகார் கொடுத்து மனு ஏற்புச் சான்றிதழ் பெற்றவுடன் பரிசுத் தொகை ரொக்கமாக வழங்கப்படும். ஒன்றுக்கும் மேற்பட்ட புகார்கள் கொடுக்கும் போது, 2-வது புகாருக்கான பரிசை தன்னார்வலர் குழு முடிவு செய்து அளிக்கும். புகார் மீதான வழக்கு பதிவு செய்யப்பட்டால் பரிசுத் தொகை 5,000 ரூபாய் வழங்கப்படும். புகார் கொடுக்கும் மனிதநேயர்கள் புகார் நகல், மனு ஏற்புச் சான்று நகல் அல்லது வழக்கு பதிவு விவரங்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் விகடன் குழுவில் பேசியுள்ளாதாக விகடன் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல் துறையோ, வருவாய் துறையோ எந்தத் துறையாக இருந்தாலும் புகார் மீது தானாக முன்வந்து, ஆணி அடித்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தால் பரிசுத் தொகையை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ஒப்படைக்கப்படும் என்று அறிவித்துள்ளது இந்த அமைப்பு.