சென்னை: தமிழக பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினர் கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக பாரதிய ஜனதா கட்சி செயற்குழு உறுப்பினரான கல்யாணராமன், ட்விட்டரில் தொடர்ச்சியாக வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களிடையே வெறுப்புணர்வு, மோதல், கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடு சர்ச்சைகுரிய கருத்துகளை பதிவிட்டது தொடர்பான வழக்கில், கடந்த ஆண்டு அக்டோபர் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரை, அக்டோபர் 23-ல் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். முதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், அதன்பின்னர் நிர்வாக காரணங்களுக்காக, கடலூர் சிறைக்கு மாற்றப்பட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி அவரது மனைவி சாந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.