“என் உயிருக்கு அச்சுறுத்தல்; என்னிடம் இருப்பது மூன்று வாய்ப்புகள்!" – நாட்டு மக்களிடம் இம்ரான் உரை

பாகிஸ்தானில் தற்போது ஆட்சியில் இருக்கும் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் பதவியிலிருந்து விலகும் அபாயம் இருந்து வருகிறது. அவருக்கு ஆதரவு கொடுத்த கட்சிகள் அவரை கைவிட்டுள்ளன. இம்ரான் கான் அமைச்சரவையில் இருந்த 50-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தலைமறைவாகிவிட்டனர். இம்ரான் கான் தனக்கு எதிராக அமெரிக்கா சதி செய்து வருவதாக மறைமுகமாகச் சாடி வருகிறார். இம்ரான் கான் அரசுக்கு எதிராக வரும் ஞாயிற்றுகிழமை நம்பிக்கையில்லா வாக்கெடுப்புக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்துள்ளன. ஏற்கெனவே நடக்கவேண்டிய இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு இப்போது ஞாயிற்றுக்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இதுவரை பாகிஸ்தான் ராணுவம் இம்ரான் கானுக்கு ஆதரவு கொடுத்து வந்தது. ஆனால் இப்போது பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கானுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.

இந்த நிலையில், இம்ரான் கான் நேற்றிரவு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர், “ராணுவம் எனக்கு மூன்று வாய்ப்புகளை வழங்கி இருக்கிறது. நம்பிக்கையில்லா தீர்மானம், விரைவில் தேர்தல், பதவியிலிருந்து ராஜினாமா ஆகிய வாய்ப்புகள் என் முன் இருக்கின்றன.

பாகிஸ்தான் தேசியக்கொடி

என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. இது தொடர்பாக எனக்கு நம்பத்தகுந்த தகவல் வந்திருக்கிறது. ஆனால் அதற்காக பயப்படமாட்டேன். பாகிஸ்தானின் சுதந்திரமான ஜனநாயகத்துக்காக தொடர்ந்து போராடுவேன். அன்னிய சக்திகளுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகளும் என்னை கொலை செய்ய முயல்கின்றன. என் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பதை நாட்டு மக்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னை மட்டுமல்லாது என் மனைவியையும் கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்” என்றார். எதிர்க்கட்சிகள் உங்களுக்கு என்ன சந்தர்ப்பம் கொடுத்துள்ளன என்ற கேள்வி பதிலளித்துள்ள இம்ரான் கான், “ஷபாஷ் ஷெரீப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பில் நான் வெற்றி பெற்றாலும், இப்போது எங்களைவிட்டுவிட்டு எதிர்க்கட்சிகளுடன் சென்று சேர்ந்துள்ளவர்களுடன் சேர்ந்து பணியாற்ற முடியாது.

இம்ரான் கான்

விரைவில் தேர்தல் நடத்துவதே சரியான தீர்வாக இருக்கும் என்று கருதுகிறேன். எனக்கு நாட்டு மக்கள் தனிப்பெரும் பெரும்பான்மையை கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதனால் எந்த வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காமல் பணியாற்ற முடியும். எதிர்க்கட்சிகள் கொண்டு வந்திருக்கும் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு சதியாகும். இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே எனக்கு தெரியும். சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வெளிநாட்டு தூதரகத்திற்கு சென்று வந்ததாக எனக்கு செய்தி வந்தது. ஹுசேன் ஹக்கானி போன்ற தலைவர்கள் நவாஸ் ஷெரீப்பை லண்டனில் சந்தித்து பேசியிருக்கின்றனர். ஒரு வெளிநாடு நான் பிரதமராக தொடர்வை விரும்பவில்லை. அதேசமயம் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் நான் அகற்றப்படவேண்டும் என்று அந்த நாடு விரும்புகிறது. எனது சுதந்திரமான வெளிநாட்டுக்கொள்கைக்கு அந்த நாடு எதிர்ப்பு தெரிவிக்கிறது” என்று தெரிவித்தார்.

முன்னதாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி அளித்த பேட்டியில், “பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய சதி நடப்பதாக பாகிஸ்தான் பாதுகாப்பு ஏஜென்சிகள் தெரிவித்துள்ளன” என்று தெரிவித்தார். இதே போன்று பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் மூத்த தலைவர் பைஃசல் வாதா அளித்திருந்த பேட்டியில், “பாகிஸ்தானை விற்பனை செய்ய அனுமதிக்காததால் பிரதமர் இம்ரான் கானை கொலை செய்ய சதி நடக்கிறது. எனவே இம்ரான் கான் பேசும் கூட்டத்தில் துப்பாக்கி துளைக்காத மேடை அமைக்கும் படி கேட்டுக்கொண்டோம். ஆனால் இம்ரான் கான் அதனை மறுத்துவிட்டார்” என்று தெரிவித்தார். இதனால் இம்ரான் கானுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது பாகிஸ்தான் இராணுவத்தின் கை ஓங்கி, அங்கு என்னவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலை இருப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.