நிர்ணயித்ததைவிட குறைந்த தொகைக்கு ஏலம்: புதுச்சேரிக்கு வருவாய் இழப்பு| Dinamalar

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான கழிவறை, பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட்டுகளில் கட்டணம் வசூலிக்கும் குத்தகை ஏலம், நிர்ணயித்ததைவிட குறைவான தொகைக்கு விடப்பட்டுள்ளதால், வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான பஸ் நிலையம், மார்க்கெட், கழிவறை, பைக் பார்க்கிங் பகுதிகளில் கட்டணம் வசூல் மற்றும் அடிக்காசு வசுல் செய்வதற்கு ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு வருகிறது.ஒவ்வொரு ஆண்டும், கடந்தாண்டு குத்தகை தொகையை விட 10 சதவீதம் கூடுதல் வைத்து ஏலம் விடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 55 இனங்களுக்கான குத்தகை விடுவதற்கான அறிவிப்பை நகராட்சி நிர்வாகம் வெளியிட்டது.

அதில், அண்ணா சாலை, நேரு வீதி, அரவிந்தர் ஆசிரமம் பகுதி, துாய்மா வீதி, ரோமண்ட் ரோலன்ட் வீதி உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகளில் வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பதற்காக குத்தகையும் இடம் பெற்றிருந்தது.இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு வரவே, பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் அறிவிப்பை ரத்து செய்து முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து, சாலைகளில் வாகன பார்க்கிங் கட்டணம் வசூலிப்பு தவிர்த்து மீதமுள்ள 40 இனங்களுக்கு, மின்னணு ஏலம் கடந்த 25ம் தேதி நடந்தது.அதில், 29 இனங்கள் மட்டுமே ஏலம் போனது. 11 இனங்களுக்கான குத்தகையை ஏலம் கேட்க எவரும் முன்வரவில்லை. ஏலம் விடப்பட்ட குத்தகை இனங்கள் பெரும்பாலும், நகராட்சி நிர்வாகம் நிர்ணயித்த தொகையில் 30 முதல் 50 சதவீதம் வரை குறைத்தே ஏலம் விடப்பட்டுள்ளது.கடந்த காலங்களில், நகராட்சி நிர்ணய தொகையைவிட கூடுதல் தொகைக்கு ஏலம் போகும்.

ஆனால், இந்தாண்டு, நிர்ணய தொகையைவிட குறைவாகவே ஏலம் விடப்பட்டுள்ளது.நிர்ணய தொகையை விட குறைவாக ஏலம் கேட்கப்பட்டால், அதனை ரத்து செய்து மறு ஏலம் விடலாம். ஆனால், என்ன காரணத்தினாலோ, குறைத்து கேட்கப்பட்ட தொகைக்கே ஏலம் விடப்பட்டுள்ளது.
இதனால், நகராட்சி நிர்வாகத்திற்கு வருவாய் பெரும் இழப்பு ஏற்படும். ஏற்கனவே, நிதி பற்றாக்குறையால் ஊழியர்களுக்கே சம்பளம் போட முடியாமல் திண்டாடி வரும் நிலையில், இந்த வருவாய் இழப்பு மேலும், நெருக்கடியை ஏற்படுத்தும்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சிவக்குமார் கூறுகையில், ‘ஏலத்தில் பங்கேற்போரில் யார் அதிக தொகைக்கு கேட்கிறார்களே அவர்களுக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.